லிடியா

லிடியா (Lydia) என்பது, இன்றைய துருக்கியின் மேற்கு மாகாணங்களான உசாக், மானிசா, இசுமிர் ஆகியவற்றில் உள்ள பண்டைய அயோனியாவுக்குக் கிழக்கில் அமைந்திருந்த ஆசியா மைனரின் இரும்புக்கால இராச்சியம் ஆகும். இதன் மக்கள் ஒரு அனத்தோலிய மொழியான லிடிய மொழியைப் பேசினர். இதன் தலைநகர் சார்டிசு.[1] லிடிய இராச்சியம் பொகாமு 1200 இலிருந்து 546 வரை இருந்தது. பொகாமு 7 ஆம் நூற்றாண்டில் இதன் ஆகக்கூடிய பரப்பளவு இருந்தபோது அது மேற்கு அனத்தோலியா முழுவதையும் உள்ளடக்கி இருந்தது. பொகாமு 546 இல் இது ஆர்க்கிமெனிட் பாரசீகப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது. இம்மாகாணம் லிடியச் சத்ரப்பி அல்லது இசுப்பார்டா என அழைக்கப்பட்டது. பொகாமு 133 இல் இது ஆசியாவின் உரோம மாகாணத்தின் ஒரு பகுதியானது. பொகாமு 7 ஆம் நூற்றாண்டளவில் லிடியாவிலேயே நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.[2]

லிடியா (Λυδία)
அனத்தோலியாவின் பழங்காலப் பகுதி
குரேயேசசின் கீழ் அதன் இறுதிக் காலத்தில் லிடியப் பேரரசு, பொகாமு 547. பொகாமு 7 ஆம் நூற்ராண்டு எல்லைகள் சிவப்பில்.
அமைவிடம்மேற்கு அனத்தோலியா, சாலிகிலி, மனிசா, துருக்கி
இருந்த நாடுபொகாமு 1200–546
மொழிலிடிய மொழி
வரலாற்றுத் தலைநகரங்கள்சார்டிசு
குறிப்பிடத்தக்க அரசர்கள்கிகெசு, குரோயேசசு
பாரசீக சத்ரப்பிலிடியா
உரோம மாகாணம்ஆசியா, லிடியா
கிரேக்க உரோமக் காலத்தில்அனத்தோலியா/ஆசியாமைனர். லிடியாவையும் அதன் குடியேற்ரப் பகுதிகளையும் உள்ளடக்கிய செந்நெறிக்காலப் பகுதிகள்

லிடியாவின் வரைவிலக்கணம்

லிடிய இராச்சியத்தின் பகுதிகள் 15 - 14 ஆம் நூற்றாண்டு வரை அர்சாவா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இருந்தாலும், லிடிய மொழி பொதுவாக அருகிலுள்ள அனத்தோலிய மொழிகளான லூவியம், கரியன், லிசியன் ஆகியவற்றைப் போல லுவிக் துணைக் குழுவின் பகுதியாக வகைப்படுத்தப்படவில்லை.[3]

எட்ரசுக்க/ லிடியக் கூட்டு நீண்ட காலமாகவே ஊகத்துக்கு உரிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. கிரேக்க வரலாற்றாளரான எரோடோட்டசு எட்ரசுக்கர்கள் லிடியாவில் இருந்து வந்ததாகக் கூறியுள்ளார். ஆனாலும், லிடிய மொழியை வாசித்ததும் அதை ஒரு அனத்தோலிய மொழியாக வகைப்படுத்தியதும் எட்ரசுக்க மொழியும், லிடிய மொழியும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவைகூட அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தாலும், டசுக்கனியில் வாழும் எட்ரசுக்க வழித்தோன்றல்களாகக் கருதப்படக் கூடியவர்கள் மீது நடத்தப்பட்ட அண்மைய மரபியல் ஆய்வில் அவர்களுக்கு மேற்கு அனத்தோலியாவில் உள்ளவர்களுடன் ஒப்புமை இருப்பதாகக் காணப்பட்டுள்ளது. இது எட்ரசுக்கர்கள் ஒரு காலத்தில் இந்தப் பகுதியிலோ அல்லது அதற்கு அருகிலேயோ வாழ்ந்ததைக் காட்டுகின்றது.[4]

புவியியல்

பழங்கால லிடியாவின் எல்லைகள் நூற்றாண்டுகளூடாக மாறி வந்துள்ளது. இது முதலில் மிசியா, கரியா, பிரிசியா, கரையோர அயோனியா போன்றவற்றை எல்லைகளாகக் கொண்டிருந்தது. பின்னர் இரண்டாம் அல்யாத்தெசு, குரோயேசசு ஆகியோரின் இராணுவ பலத்தினால், லிசியா தவிர்ந்த அலீசு ஆற்றுக்கு மேற்கில் உள்ள ஆசியா மைனர் முழுவதையும், லிடியா கட்டுப்படுத்தியது. லிடியா பின்னர் அதன் அளவில் குறையவில்லை. பாரசீக ஆக்கிரமிப்புக்குப் பின்னர் லிடியாவின் தெற்கு எல்லையாக மயீன்டர் ஆறு கருதப்பட்டது. பேரரசுக்கால உரோமர் காலத்தில் லிடியாவுக்குள் ஒரு பக்கத்தில் மிசியாவும், கேரியாவும் மறு பக்கத்தில் பிரிசியாவும், ஏஜியக் கடலும் அடங்கியிருந்தன.

மொழி

லிடிய மொழி, லூவிய, இட்டைட்டு ஆகிய மொழிகளுடன் தொடர்புள்ள, அனத்தோலிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்திய-ஐரோப்பிய மொழி. சான்றுகள் துண்டுதுண்டாக இருப்பதால், பல சொற்களின் பொருள்கள் புரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், இலக்கணம் பற்றிய அறிவு பெருமளவுக்கு உண்டு.

வரலாறு

பொகாமு 12 ஆம் நூற்றாண்டில் இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் லிடியா உருவானது. இட்டைட்டுக் காலத்தில் இப்பகுதியின் பெயர் அர்சாவா. கிரேக்க மூலங்களின்படி லிடிய இராச்சியத்தின் தொடக்கக்காலப் பெயர் மையோனியா. ஓமர் லிடியாவின் குடிமக்களை "மெயோனெசு" எனக் குறிப்பிட்டுள்ளார்.[5] ஓமர், லிடியாவின் தலைநகரை சார்டிசு எனக் குறிப்பிடாமல் ஐடே (Hyde) என்கிறார். இது சார்டிசு நகரம் இருந்த மாவட்டத்தின் பெயராக இருக்கக்கூடும்.

மேற்கோள்கள்

  1. Rhodes, P.J. A History of the Classical Greek World 478-323 BC. 2nd edition. Chichester: Wiley-Blackwell, 2010, p. 6.
  2. "Lydia" in Oxford Dictionary of English. Oxford University Press, 2010. Oxford Reference Online. 14 October 2011.
  3. I. Yakubovich, Sociolinguistics of the Luvian Language, Leiden: Brill, 2010, p. 6
  4. "Ancient Etruscans Were Immigrants From Anatolia, Or What Is Now Turkey" (in en). ScienceDaily. https://www.sciencedaily.com/releases/2007/06/070616191637.htm.
  5. As for the etymologies of Lydia and Maionia, see H. Craig Melchert "Greek mólybdos as a Loanword from Lydian", University of North Carolina at Chapel Hill, pp. 3, 4, 11 (fn. 5).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.