லயன்எயார் பறப்பு 602
லயன்எயார் பறப்பு 602 (Lionair Flight 602) என்பது இலங்கையின் வட-மேற்குக் கரைக் கடலில் வீழ்ந்த இலயன் ஏர் வானூர்தி நிறுவனத்தின் அந்தோனொவ் ஏஎன்-24 ரக பயணிகள் வானூர்தி ஆகும். இவ்வானூர்தி 1998 செப்டம்பர் 29 இல் காங்கேசன்துறையில் இருந்து பல உயர் மட்ட இராணுவத்தினருடனும் சில பயணிகளுடனும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிட நேரத்தில் ராடார் கருவிகளில் இருந்து மறைந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து இவ்வானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 7 பணியாளர்கள் உட்பட அனைத்து 55 பேரும் கொல்லப்பட்டனர்.[1] விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.[2]
![]() தாக்குதலுக்குள்ளான வானூர்தி போன்ற அந்தோனொவ் AN-24RV | |
நிகழ்வு சுருக்கம் | |
---|---|
நாள் | செப்டம்பர் 29, 1998 |
வகைப்பாடு | விசாரணையில் |
இடம் | மன்னார் கடற்பரப்பு, இலங்கை |
பயணிகள் | 48 |
ஊழியர் | 7 |
உயிரிழப்புகள் | 55 (அனைவரும்) |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | அந்தோனொவ் An-24RV |
இயக்கம் | லயன்எயார் |
வானூர்தி பதிவு | EW-46465 |
பறப்பு புறப்பாடு | காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், இலங்கை |
சேருமிடம் | இரத்மலானை, கொழும்பு, இலங்கை ![]() |
வானூர்தியும் அதன் பணியாளர்களும்
அந்தோனொவ் ஏஎன்-24 வானூர்து பெலருசின் கொமெலாவியா நிறுவனத்திடம் இருந்து 602 பறப்புக்காக குத்தகைக்கு வாங்கப்பட்டது. பெலருசிய விமானி மத்தோச்க்கோ அனத்தோலி இதன் தலைவராகப் பணியாற்றினார். யாழ்ப்பாண வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட 10 நிமிட நேரத்தில் விமானம் காணாமல் போயிற்று. பெலருசைச் சேர்ந்த லிசைவானொவ் சியார்கெய், கொசுலோவ் செர்கெய், அனாபிரியென்கா சியார்கெய் ஆகியோரும் இயக்கப் பணியாளர்களும், தர்சினி குணசேகர, கிரிஷான் நெல்சன், விஜிதா ஆகிய உள்ளூர் பணியாளர்களும் இவ்விமானத்தில் பயணம் செய்தனர்.[1] இதில் பெண் உபசரணையாளராக இருந்த தர்சினி குணசேகர முன்னாள் காவல்துறைப் பேச்சாளரான மூத்த காவல்துறை அத்தியட்சகரான குணசேகரவின் புதல்வியாவார்.[3]
சிதைவுகள் கண்டுபிடிப்பு
2012 அக்டோபரில் இவ்விமானத்தின் சிதைந்த பகுதிகள் என நம்பப்படும் ஒரு தொகுதி வடக்குக் கடலில் இரணைதீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது இலங்கைக் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.[4] இதனை தோண்டி எடுக்கும் பணிகள் 2013 மே 3 முதல் 6 வரையில் ஆழ்கடலில் இடம்பெற்றன.[3] விமானத்தின் உதிரிப் பாகங்களும் பயணிகளின் ஆடைகள் போன்றவையும் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற பெலருசிய விமானியின் தங்கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[3]
அடையாளம் காணுதல்
இந்த விமான விபத்தின் போது பெறப்பட்ட சிதைவுகளை அடையாளம் காணும் நோக்குடன் சனவரி 11, 2014 மற்றும் சனவரி 12, 2014 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது [5][6]. இதில் ஆடைகள் உடமைகள் போன்ற 72 வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது[7].
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- Criminal Occurrence description at the Aviation Safety Network. Retrieved on 2006-11-23.
- More than ever, Eelam seems a reality now, by Major General Ashok K Mehta
- லயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூடுகள் யாழ். துரையப்பா அரங்கில் காட்சிக்கு வைப்பு, தினகரன், டிசம்பர் 31, 2013
- "Sri Lanka Navy salvage wreckage of Lion Air". Ministry of Defense and Urban Development. பார்த்த நாள் 15 அக்டோபர் 2013.
- "லயன் எயார் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் மக்கள் பார்வைக்கு". வீரகேசரி ஒன்லைன் (11 சனவரி 2014). பார்த்த நாள் 11 சனவரி 2014.
- "லயன் எயார் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண நடவடிக்கை!". தமிழ் வின் (6 சனவரி 2014). பார்த்த நாள் 6 சனவரி 2014.
- "லயன் எயார் விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளது". தமிழ் வின் (12 சனவரி 2014). பார்த்த நாள் 12 சனவரி 2014.