ரோட்டா வைரசு
மழலையருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் முக்கிய கரணி இந்த ரோட்டா வைரசே (Rotavirus) ஆகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் வாணாளில் முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்த வைரசால் பாதிக்கப்படுவது திண்ணம். பாதிக்கப்பட்ட மழலையருக்கு வாந்தி, நீா்த்த பேதி (Watery Diarrhoea) ஏற்படும். உடலில் நீா் அளவு(Dehydration) குன்றி பல குழந்தைகள் மரணத்தைத் தழுவ நேரிடும்.

இவ்வைரசு பற்றி அறிய வேண்டியதன் அவசியம்
இந்திய மருத்துவமனைகளில் கடும் வயிற்றுப்போக்கிற்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளுள் ஐந்தில் ஒருவர் இவ்வைரசு தொற்றுக்கு ஆளானவரே.
தடுப்பு மருந்து
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாய்வழி தடுப்பு மருந்து (oral vaccine) அறிமுகப்படுத்தப்பட்டு மழலை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவிலும் வாய்வழி தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவம்
நோய்கண்ட மழலையருக்கு மறுநீரேற்றமே (Rehydration) சிகிச்சை ஆகும். தாய்மார்கள் தாய்ப்பால் தருவதைத் தொடர வேண்டும். வயிற்றால் போகிறதே என தாய்ப்பால் கொடுக்காமலோ நீா் தராமலோ இருந்து விடக் கூடாது. இதுவே மழலையின் உயிர்க்கிறுதி ஆவதை உறுதி செய்து விடும்.
கடுமையான நீரிறக்கத்தில் குழந்தையின் உச்சிக்குழி (Bregma) மிகவும் குழி விழிந்து காணப்படும். வாயில் எச்சில் இன்றி வாய் உலா்ந்து இருக்கும். வியா்வை இருக்காது. கண்கள் ஈரப்பசையின்றி காய்ந்து போகும். மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்நிலைக்குச் சிரை (vein) மூலம் நீரேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.