ராஜசாகி மாவட்டம்

ராஜசாகி மாவட்டம் (Rajshahi District) (வங்காள: রাজশাহী জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ராஜசாகி ஒரு பெருநகர மாநகராட்சியும் ஆகும்.

வங்காளதேசத்தில் ராஜசாகி மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

ராஜசாகி மாவட்டத்தின் வடக்கில் நவகோன் மாவட்டமும், கிழக்கில் நத்தோர் மாவட்டமும், தெற்கில் நவாப்கஞ்ச் மாவட்டம் மற்றும் பத்மா ஆறும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காளமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆறுகள்

இம்மாவட்டத்தில் 146 கிலோ மீட்டர் நீளத்திற்கு பத்மா ஆறு, மகாநந்தா ஆறு, போரல் ஆறு மற்றும் நரோத் ஆறுகள் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

ராஜசாகி மாவட்டம் பதின்மூன்று துணை மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்: பகா, சார்காட், துர்காப்ப்பூர், கோதகரி, மோகன்பூர், பாபா, புதியா, தாகூர், போவ்லியா, மதிகர், ராஜ்பரா மற்றும் ஷா மக்தம் ஆகும். இம்மாவட்டத்தில் ஒரு பெருநகர மாநகராட்சியும், 14 நகராட்சிகளும், 71 ஊராட்சி ஒன்றியங்களும், 1727 கிராமங்களும் கொண்டுள்ளது.

போக்குவரத்து

ராஜசாகி தொடருந்து நிலையம்

1270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 96 தார்ச் சாலைகள், 546 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 108 சாதாரண சாலைகள் மற்றும் 63 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இருப்புப் பாதைகள் மாவட்டத்தின் மற்றும் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

பட்டு நகரம்

ராஜசாகி பெருநகரத்தை பட்டு நகரம் என்று அழைக்கப்படுகிறது. வங்காளதேசத்தின் தேசிய பட்டு வாரியம் ராஜசாகி நகரத்தில் உள்ளது. ராஜசாகி மாவட்டம் மாம்பழங்களுக்கும், பட்டுச் சேலைகளுக்கும் புகழ் பெற்றது.

மக்கள் தொகையியல்

2425.37 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட ராஜசாகி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 25,95,197 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,09,890 ஆகவும், பெண்கள் 12,85,307 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 102 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1070 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 53.00% ஆக உள்ளது.[1] இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 6000 ஆகும். இம்மாவட்டம் ஆறு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

வேளாண்மை

இம்மாவட்டத்தில் மாம்பழம், நெல், சணல், கரும்பு, பருப்பு வகைகள், கோதுமை, புகையிலை, வெற்றிலை, நிலக்கடலை வேளாண்மை நன்கு நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.