ஐரோவாசியா

யுரேசியா என்பது ஏறத்தாழ 53,990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. ஐரோவாசியா என்னும் இந்தக் கருத்துரு மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. ஐரோவாசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆப்பிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும். ஐரோவாசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69 விழுக்காடான 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

ஐரோவாசியா
ஐரோவாசியா
புவியின் ஆப்பிரிக்கா-ஐரோவாசியப் பகுதி

வரலாறும் பண்பாடும்

துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் என்பார், உலக வரலாற்றில் ஐரோவாசியாவின் வல்லாண்மைக்கு, அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்புக்கு ஏற்ற இப்பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்.

வரலாற்றுக் காலகட்டங்களில் ஐரோவாசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய ஐரோவாசிய வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன.

நிலவியல்

ஐரோவாசியா ஏறத்தாழ 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது ஐரோவமெரிக்கா எனப்படுகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.