யூக்ளினா

யூக்ளினாஎன்பது ஓரணுவுயிர்கள் தொகுதியில் கசையுயிர் வகுப்பைச் சேர்ந்தவை. யூக்ளினாவின் கட்டமைப்பு அமீபாவை விட சற்று மேம்பட்டதாகும். யூக்ளினாவில் உட்கரு, உயிரணு ஊனீர் மற்றும் உயிர்மத் திசுக்களாலான உறுதியான உறை அமைந்துள்ளதால் அது திட்டவட்டமான வடிவத்தைப் பெற்றுள்ளது. நீர்நிலைகள் வற்றும் போது நீரின் மேற்பரப்பில் ஒருவித பச்சை நிறம் மிதந்து ஒளிரும் . அவ்வாறு மிதந்து ஒளிர்பவை யூக்ளினா எனப்படும் நுண்ணுயிர்களே.

யூக்ளினா
உயிரியல் வகைப்பாடு
உலகம்: Eukaryota
திணை: Protista
பெருந்தொகுதி: Discoba
தொகுதி: Euglenozoa
வகுப்பு: Euglenoidea
வரிசை: Euglenales
குடும்பம்: Euglenaceae
பேரினம்: Euglena
Ehrenberg, 1830

யூக்ளினாவின் கட்டமைப்பு

யூக்ளினாவின் உடல் கட்டமைப்பு
  • நீரில் நீந்துவதற்கேற்ப உடலின் முன் புறம் குறுகி, பின்புறம் கூர்ந்து நடுப்பாகம் சற்று பருத்து இருக்கும்.
  • முன்புற நுனியில் விகுவான கசை ஒன்று இருக்கும் இந்தக் கசையின் உதவியால் தான் யூக்ளினா திருகாணியைப் போல் நீரில் ஓயாது சுழன்று கொண்டிருக்கும். இந்த சுழற்சியே அதன் இயக்கத்திற்குக் காரணமாகிறது.
  • கசையின் தொடக்கவிடத்தில் ஒரு சிவப்புப் புள்ளிபோன்ற புள்ளிக்கண் இதற்கு உண்டு. இதன் மூலம் யூக்ளினா வெளிச்சத்தை அறிந்துகொண்டு இயங்க முடியும்.

உணவூட்டம்

யூக்ளினாவின் உடல் பச்சையம் என்னும் பசிய பொருள் நிறைந்த முட்டை வடிவ கணிகங்களால் ஆனது. இக்கணிகங்களின் உதவியால், தாவரங்களைப் போன்றே யூக்ளினாவும் கரியமில வாயுவை வெளிச்சத்தில் உட்கொள்கிறது. நீரில் கரைந்துள்ள மட்கிய அங்ககப் பொருள்களையும் யூக்ளினா உணவாகக் கொள்கிறது.
ஒளியில் இருக்கும் போது. யூக்ளினா பசுமை நிறமாகத் தெரியும். ஆனால், இருளில் சில நாட்கள் இருந்தால், பச்சை நிறம் மறைந்து, வெளிறி காணப்படும். மீண்டும் ஒளியில் வந்தபின் பச்சை நிறம் பெற்றுத் தவரங்களைப் போல் ஊட்டம் பெறும். யூக்ளினா தன் உடலில் உணவுப் பொருளைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனால் ஒருமுறை நன்கு ஊட்டம் பெற்றால் நீண்ட காலத்திற்கு ஊட்டம் பெறாமல் இருக்க அதனால் முடியும்.

சுவாசித்தல்

அமீபியாவைப் போலவே யூக்ளினாவும் தனது உடலின் மேற்பரப்பு முழுவதாலும் சுவாசிக்கிறது.

கழிவு வெளியேற்றம்

யூக்ளினா தனது கழிவுப் பொருள்களை கழிவு வெளியேற்றக் குமிழியின் மூலம் வெளியேற்றுகிறது. இக்குமிழி கசையின் தொடக்கவிடத்தில் சிறு வடிகால்கள் சூழ அமைந்துள்ளது.

இனப்பெருக்கம்

யூக்ளினா பிளவுற்று இரு புது யூக்ளினாக்கள் தொன்றுதல்

பிற ஓரணுவுயிர்களைப் போலவே யூக்ளினாவும் பிளவுறுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. நீள வாக்கில் பிளவுறும்போது இரண்டு புது யூக்ளினாக்கள் உண்டாகும். சூழ்நிலைக்கேற்ப தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சவ்வுறைகளால் அவை மூடிக் கொள்ளும்.

உசாத்துணை

ஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.