இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
இராமநாதன் மகளிர் கல்லூரி சேர் பொன் இராமநாதனால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்களுக்கான பாடசாலையாகும். இது இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுவில் பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் வடக்குமருதனார்மடம் சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளுள் ஒன்றாகும்.

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேசிய எழுச்சியின் விளைவாக யாழ்ப்பாணத்தில் இந்துப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை அமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இந்துக் கல்லூரிகள் தொடங்கின. அக் காலத்தில் இலங்கைச் சட்டநிரூபண சபையில் உறுப்பினராக இருந்த சேர். பொன். இராமநாதன், தேசியப் பள்ளிகளுக்கு ஆதரவாகச் சட்ட நிரூபண சபையிலும், வெளியிலும் செயற்பட்டு வந்தார்.
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட இந்துப் பாடசாலைகள் ஆண்பிள்ளைகளுக்கான பாடசாலைகளாகவே இருந்தன. சைவப் பெண் பிள்ளைகள் கல்வி பெறாத நிலையையும் அதற்கான பாடசாலைகள் இல்லாத நிலையையும் மாற்றும் நோக்குடன் இராமநாதன் இந்தப் பெண்கள் கல்லூரியை அமைக்க முன்வந்தார்.