மொழிமுதல் குற்றியலுகரம்

பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும்.

  • பாகு + னிது என்னும்போது பாகு என்பது பாக் என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் பாகினிது என முடியும்.

மொழிமுதல் எழுத்துக்கள் என்று தொல்காப்பியம் குறிப்பிடும் 94 எழுத்துக்களில் நுந்தை என்னும் குற்றியலுகரச் சொல்லும் ஒன்று. இச் சொல்லில் 'நு' என்னும் எழுத்து நுங்கு, நுவல், நுழை, நுணங்கு என்னும் சொற்களில் வரும் நு போல இதழ் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும்.

நுந்தை என்பது உன் தந்தை எனப் பொருள்படுவதோர் முறைப்பெயர்.[1][2]

நுந்தை சொல்லாட்சிகள்

  • யாயும்; நுந்தை, வாழியர்,[3]
  • கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை,[4]
  • நுந்தை, குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ? [5]
  • எந்தை திமில், இது, நுந்தை திமில்[6]
  • நுந்தை மனை வரை இறந்து வந்தனை;[7]
  • யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? [8] இப்படி அகநானூறு, கலித்தொகை முதலான நூல்களில்ஃ வரும் பாடல்களிலும் இந்தச் செய்திகள் உள்ளன.

இக்கால வழக்கு

  • உன் அம்மா என்பதை இக்காலத்தில் ஞொம்மா என்பர். இது 'நும்மா' குற்றியலுகரத் தொடக்கச் சொல். 'நொப்பா', 'ஞொப்பா' என்பனவும் மொழிமுதல் குற்றியலுகரச் சொற்களின் திரிபு.

அடிக்குறிப்பு

  1. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
    ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34
  2. முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
    அப் பெயர் மருங்கின் நிலையியலான. தொல்காப்பியம் மொழிமரபு 35
  3. நற்றிணை 134
  4. நற்றிணை 202
  5. நற்றிணை 204
  6. நற்றிணை 331
  7. நற்றிணை 362
  8. குறுந்தொகை 40
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.