மெதடிஸ்ட் தமிழ்பள்ளி

மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் பேராக் மாநிலத்தில் புந்தோங் நகரில் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி புந்தோங் வட்டாரத்தில் வாழும் கிறிஸ்துவத் தமிழர்களிடையே புகழ் பெற்ற பள்ளி ஆகும். புந்தோங் மெட்ராஸ் சாலையில் இப்பள்ளி அமைந்து உள்ளது. மலேசியாவில் முற்றிலும் எஃகு, இரும்பு தளவாடங்களினால் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப் பள்ளிக்கூடம் எனும் பெருமையும் மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளிக்குச் சேர்கிறது.

மெதடிஸ்ட் தமிழ்பள்ளி
SJK(T) Methodist
அமைவிடம்
புந்தோங், ஈப்போ, மலேசியா
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
தொடக்கம்1948
நிறுவனர்பாக்கியநாதன்
பள்ளி மாவட்டம்கிந்தா
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்ABD2163
தலைமை ஆசிரியர்திருமதி மேரி பரிபூரணம்

துணைத் தலைமையாசிரியைகள்
திருமதி ஜெபராணி டேவிட் (பல்லூடகம்)
திருமதி விக்டோரியா ஆரோக்கியராஜ் (கல்வி)
புவான் நோர் ஹாஸ்லினா ஹாசன் (தகவல் தொழில்நுட்பம்)
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்234
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

வரலாறு

புந்தோங் சுங்கைபாரி சாலையில் ஐந்து பள்ளிகள் உள்ளன. ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தச் சாலையில் மட்டும் இரு உயர்நிலைப்பள்ளிகள், இரு தமிழ்ப்பள்ளிகள், ஓர் ஆங்கிலப் பள்ளி உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி 1948 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாள் பாக்கியநாதன் என்பவரின் முயற்சியில் தொடங்கப் பட்டது.

லோரோங் பாக்கியநாதன்

பாக்கியநாதன் அவர்களின் அரும் பெரும் நற்பணிகளை நினைவில் கொண்டு, மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் சாலைக்கு "லோரோங் பாக்கியநாதன்" எனும் பெயர் சூட்டப்பட்டது. புதிய பள்ளி மெட்ராஸ் சாலைக்கு மாற்றம் செய்யப் பட்டிருந்தாலும் பழைய "லோரோங் பாக்கியநாதன்" எனும் பெயர் இன்னும் நிலைத்து நிற்கிறது.

புந்தோங் புறநகர்ப் பகுதியில் நிறைய தமிழர்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

டி.எஸ்.ஜேசுதாஸ்

தொடக்கக் காலத்தில் புந்தோங் அதன் சுற்று வட்டாரத்தில் வாழ்ந்த தமிழ்க் குடுமபங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் பயின்றனர். முதன்முதலாக இப்பள்ளியில் பதினான்கு மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றனர்.

மறைந்த திருமதி டி.எஸ்.ஜேசுதாஸ் என்பவரின் அயராத உழைப்பினால் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. அதனால் வகுப்பறைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

வகுப்பறைகள் பற்றாக்குறையைத் தவிர்க்கப் பள்ளிக்கூடத்தின் அருகில் இருந்த தேவாலயக் கட்டடமும் மதக் குருவின் வீடும் வகுப்பறைகளாக மாற்றப்பட்டன. காலப் போக்கில் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. மீண்டும் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது.

மூன்று மாடிக் கட்டடம்

டத்தோஸ்ரீ சாமிவேலு

1950 ஆம் ஆண்டு "ஐசெக் நினைவு மண்டபம்" பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டது. அந்த மண்டபம் வகுப்பறைப் பற்றாக்குறையைச் சற்று தளர்த்தி விட்டது. 1998ஆம் ஆண்டில் பதின்மூன்று இலட்சம் வெள்ளி செலவில் மலேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆதரவுடன் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

மலேசியாவில் முற்றிலும் எஃகு, இரும்பினால் ஆன முதல் தமிழ்ப் பள்ளிக்கூடம் எனும் வரலாற்றுப் பெருமையும் இப்பள்ளிக்குச் சேர்கின்றது. இப்பள்ளியின் கூரை, சாளரங்கள், தூண்கள் அனைத்தும் எஃகு, இரும்பு வேலைப்பாடுகளால் ஆனவை. அனைத்துச் சமூகங்களையும் திகைக்கச் செய்யும் அளவிற்கு இப்பள்ளி கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கின்றது.

தற்சமயம் புந்தோங் மெட்ராஸ் சாலையில் மூன்று மாடிக் கட்டடத்தில் மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 234 மாணவவர் கல்வி பயின்று வருகிறனர். ஒரு தலைமை ஆசிரியருடன் பதின்மூன்று ஆசிரியர்களும் ஐந்து பணியாளர்களும் இப்பள்ளியில் பணி புரிகின்றனர்.

பள்ளிப் பாடல்

எங்கள் பள்ளி எங்கள் பள்ளி

எங்கள் தமிழ்ப் பள்ளி !

தங்க பாக்கிய நாதனாலே

தமிழ் வளர்க்கும் பள்ளி !


பொங்கு மின்பக் கல்வியூட்டும்

புனிதமான பள்ளி !

தங்கும் பெருமை யாவுமிக்க

தமிழ் மெதடிஸ்ட் பள்ளி !


ஒழுக்கமன்பு உயர்ந்த பண்பில்

ஓங்கி நிற்கும் பள்ளி !

தேட்டமுடன் தமிழ் மொழியைத்

தினமும் கற்கும் பள்ளி !


அன்னை தந்தை குரு வினோடு

அரசு நாடுங் காப்போம் !

கண்ணைத் திறந்த பள்ளிக் கெங்கள்

கன்ணியத்தைச் சேர்ப்போம் !


கூட்டுறவாய்க் கரமிணைந்து

குரு மொழியில் நிற்போம் !

ஏட்டுக் கல்வி வளர்ச்சியோடு

எழும்பிப் பிரகாசிப்போம் !

கடந்த கால நினைவுகள்

மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் (1981 - 1986) ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு ஒரு கௌரவிப்பு விழா மே மாதம் 17 ஆம் தேதி ஒரு பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்றது. அதில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு விருந்து படைத்து பரிசுகளையும் வழங்கி மாணவர்கள் சிறப்பு செய்தனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.