மூவாதியார்

மூவாதியார் பதினெண் கீழ்க்கணக்குநூல் காலப் புலவர்களில் ஒருவர். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். ஐந்திணை எழுபது என்னும் என்னும் நூலிலுள்ள அகப்பொருள் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை.

பெயர் விளக்கம்

மூ ஆதியார் என்னும் சொற்கள் மூவாதியார் எனப் புணரும். இந்தப் புலவரின் பெயர் இவ்வாறு அமைந்த ஒன்று. இதில் உள்ள சொற்களில் 'மூ' என்பது மூப்புத் தன்மையை உணர்த்தும்.[1]

இவர் சமயம்

ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் காட்டும் ஆதிநாதர் சமணர். 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவரை ஆதிநாதர் என்பர். ஆதியார் என்னும் சொல்லை இந்த ஆதிநாதர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்த அறிஞர்கள் சிலர் இவரைச் சமணர் என்பர். ஆதிநாதர் என்னும் பெயர் திருமாலையும் குறிக்கும்.[2][3] எனவே இவரைச் சமணர் எனக் கொள்வதற்குப் போதுமான சான்று இல்லை.

இவர் பாடல்

இவர் தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமானை வழிபடுகிறார். நெற்றியில் கண்ணை உடையவன், கழுத்தில் ஆலகால நஞ்சினைத் தேக்கிக்கொண்டவன், பேரண்டமாகவும், அனைத்துக்கும் மூலமாகவும் விளங்குபவன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால்-கண்ணுதலின்
முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.

அடிக்குறிப்பு

  1. மூ என்பது இரண்டு எண்களை உறழும் (பெருக்கும்) வாய்பாட்டில் மூவாறு பதினெட்டு என வரும். மூவாதியார் பெயரமைதியில் இந்தப் பொருளுக்கு இடமில்லை.
  2. ஆழ்வார் திருநகரி ஆதிநாதர்
  3. ஆதிநாதர் கோயில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.