மூர் மார்க்கெட்

மூர் மார்க்கெட் (Moore Market ) சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகே அமைந்திருந்த பழமையான வணிக வளாகம். அன்றயை காலத்தில் மூர் மார்க்கெட், சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருந்தது. மூர் மார்க்கெட்டில் பழங்கால பொருட்கள், புதிய மற்றும் அரிய பழங்கால நூல்கள் கிடைக்கும். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் எல்.பி., ரெக்கார்டர்கள் வரை இங்கு கிடைக்கும்.

மூர் மார்க்கெட் வணிக வளாகம், 1905

மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும், வாங்கவும், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் முடியும்.

மூர் மார்கெட் வளாகத்தில் நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் உண்டு. அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.

புத்தகக் கடைகள் மட்டுமின்றி ஆயத்த துணிக்கடைகள், பொம்மைக் கடைகள் பழங்கால பொருட்கள் கடை என அனைத்து வகையான கடைகள் மூர் மார்க்கெட்டில் இருந்தது.

வரலாறு

அன்றைய சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த சர். ஜார்ஜ் மூர் என்பவரால், சென்னை ஜார்ஜ் டவுன், பிராட்வேவில் 1898-இல் இவ்வணிக வளாகத்தின் அஸ்திவாரக்கல் நடப்பட்டது. மூர் மார்க்கெட் கட்டிடம் இந்தோ-சாரசானிக் கட்டிடக்கலை வடிவத்தில் ஆர். இ. எல்லீஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஏ. சுப்பிரமணிய அய்யரால் 1900-இல் கட்டிமுடிக்கப்பட்டது. கூவி விற்கும் வணிகர்களுக்காக கட்டப்பட்ட வணிக வளாகம் இது. ஜார்ஜ் மூர் எனும் ஆங்கிலேயர் இக்கட்டிடம் கட்ட முயற்சி எடுத்ததால், இக்கட்டிடத்திற்கு அவர் பெயரே சூட்டப்பட்டது.

அழிவு

மூர் மார்க்கெட் 30-05-1985-இல் ஏற்பட்ட பெருந்தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலாயிற்று. இக்கட்டிடத்தை மீண்டும் புதுப்பிக்காமல் முழுவதுமாக இடித்து, இந்திய புகைவண்டி கழகத்தார் மூர் மார்க்கெட் வணிக வளாக கட்டிடத்தை தன் வசப்படுத்தி, அவ்விடத்தில் நகர்புற மின்சார இரயில்களுக்கான நடைமேடைகளை அமைத்தது.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.