மூக்குத்தி

மூக்குத்தி (Nose-jewel ) என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்கணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன. வெள்ளி, பித்தளையும் பயன்படுவதுண்டு.

மூக்குத்தி அணிந்திருக்கும் தமிழ்ப் பெண்

வரலாறு

மூக்குத்தி பற்றி பழைய இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. சோழர்,பாண்டியர்.கால சிற்பங்கள் ஓவியங்கள் போன்றவற்றிலும் காணப்படவில்லை. பழந்தமிழகத்திலும், வடஇந்தியாவிலும் பழங்காலத்தில் மூக்குத்தி அணிந்தாக தெரியவில்லை. நிறைய அணிகலன்களுடன் காணப்படும் பஹ்ரூத் சிற்பங்களிலோ, பைரா, புத்தகயா, கவுசம்பி, குசானர்களின் சிற்பங்கள் அஜந்தா ஓவியங்களிலோ, உதயகிரி சிற்பங்களிலோ மூக்கில் அணி எதுவும் காணப்படவில்லை[1] 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகே இந்தியாவில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றில் மூக்குத்தி காணயியலுகிறது.[2] மதுரை மீனாட்சிக்கும்,கன்னியாகமரியின் குமரியம்மனுக்கும் உள்ள மூக்குத்திகள் பிற்காலத்தில் அணிவிக்கப்பட்டவை என்ற கருத்து உள்ளது. மூக்குத்தி அணியும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூக்குத்தி வகைகள்

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள் பிரபலமாகவுள்ளன. நாதையா எனப்படும் வெளியில் உள்ள ஒரு வளையமும்,அத்துடன் ஒரு சங்கிலியும் இணைக்கப்பட்ட மூக்கணி ராஜஸ்தானில் செல்வாக்குடன் உள்ளது. நாத் மற்றும் நாக் அணி, ஜம்மு காஷ்மீரில் பரவியுள்ள மூக்கணி. மூக்குத்தி என்பது தமிழகத்தில் பரவலாக‍ அணியப்படுகிறது மேற்கு வங்கத்தில் புல்லாக்கு அணியப்படுகிறது. உ.பி. யில் முர்க்கிலா, எனப்படும் அணிஅணியப்படுகிறது. நாத்து, பூங்க், மூக்கு கடா ஆகியவை ஆந்திரத்தின் மூக்கணிகள். மகாராஸ்டிராவில் முத்து கோர்க்கப்பட்ட வளையமுள்ள மூக்கணியை அணிகிறார்கள். அரியானாவில் அணியப்படுவது புர்லி, கோக்கா, நாத், லாங்க் அகியவையாகும். பீகாரில் நாக்புல், சந்திரா, சொக்கி, ஜுல்னி, தோராபுல் அகிய மூக்கணிகள் அணியப்படுகின்றன ஒடிசாவின் மூக்கணிகள் ஜாரியாபுலி, கைலேகி ஆகும். இவற்றுள் விலையுயர்ந்த அல்லது சாதாரண கற்கள் பதிக்கப்படுவதுண்டு. இம்மாநில பழங்குடி மக்கள் இரு மூக்குகளிலும் இரு வளையங்களும் நடுவில் ஒன்றுமாக மூக்கணிகளை அணிகின்றனர். [3]

மேற்கோள்கள்

  1. மூக்கு பற்றி முத்தான தகவல்கள்-முத்தாரம் வார‍இதழ் 21. பெப்ரவரி 2003 பக்கம் 5
  2. மூக்கு பற்றி முத்தான தகவல்கள்-முத்தாரம் வார‍இதழ் 21. பெப்ரவரி 2003 பக்கம் 4
  3. மூக்கு பற்றி முத்தான தகவல்கள்-முத்தாரம் வார‍இதழ் 21. பெப்ரவரி 2003 பக்கம் 7
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.