முதுசொம்

முதுசொம் என்பது, பொதுவாக முந்திய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்தைக் குறிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, முதுசொம் என்பதற்கு முதுபொருள், பூர்வீகச் சொத்து எனப் பொருள் தருகிறது.[1] ஒருவர் தான் உழைத்துச் சேர்க்கும் சொத்திலிருந்து இது வேறுபடுகிறது. இதை முதிசம், முதுசம் என்றும் சொல்வது உண்டு.

சொற்பிறப்பு

"முதுசொம்" என்னும் சொல், முதுமை, சொம் என்னும் இரு சொற்களால் ஆனது. முதுமை என்பது இங்கே முந்திய, பழைய போன்ற பொருள்களைத் தருவது. சொம் என்பதற்கு சொத்து,[2] உரிமை போன்ற பொருள்கள் உள்ளன. இவ்விரு சொற்களும் சேர்ந்து பழைய தலைமுறையிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்தைக் குறித்தது.

முதுசொமும் தேசவழமையும்

இலங்கையின் வட பகுதியின் மரபுவழிச் சட்டமான தேசவழமை, திருமணத்தின்போது கணவன் கொண்டுவருகின்ற சொத்தையே முதுசொம் என வரையறை செய்கிறது.[3] திருமணத்தின்போது மனைவி கொண்டு வருகின்ற சொத்துக்களை சீதனம் என்ற சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், தேசவழமையின்படி, கணவனுக்கோ, மனைவிக்கோ கிடைக்கும் பரம்பரைச் சொத்துக்கள் முதுசம் எனக் கொள்ளப்படுவதாக எச். டபிள்யூ. தம்பையா குறிப்பிடுகிறார்.[4] யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைச் சட்டம்,[5] முதுசொம் குறித்து மேலும் விளக்கமாக வரையறை செய்கிறது. இதன்படி, முதுசொம் என்பது ஒருவர் தனது பெற்றோர் அல்லது அல்லது அவர்களுக்கு முந்திய நேரடிக் கால்வழியைச் சேர்ந்தோரின் மரணத்தினால் வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்தையே குறிக்கும். அவ்வாறல்லாத பிற உறவினரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்துக்களை அச்சட்டம் உரிமை என்ற பெயரால் குறிப்பிடுகிறது.[6] மிகப் பழைய தேசவழமையின்படி, முதுசொச் சொத்துக்கள் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதில் பெண் வாரிசுகளுக்கு உரிமை கிடையாது. எனினும் பிற்காலத்தில், பெண்களுக்குக் கொடுக்கவேண்டிய சீதனத்தின் அளவு அதிகரித்தபோது, முதுசொச் சொத்துக்களையும் பெண் பிள்ளைகளுக்கே கொடுக்க வேண்டிய நிலை உருவானது.

குறிப்புகள்

  1. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் முதுசொம், முதிசம் என்பவற்றுக்கான பதிவு
  2. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் சொம் என்பதற்கான பதிவு
  3. பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 85.
  4. Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 150.
  5. Jaffna Matrimonial Rights and Inheritance Ordinance.
  6. Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 156.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.