முதுகலை வணிக மேலாண்மை

முதுகலை வணிக மேலாண்மை (Master of Business Administration, MBA) வணிக மேலாண்மைத் துறையில் பட்டமேற்படிப்புக் கல்வி பயின்றபின் பெறும் ஓர் பட்டமாகும். பல கல்வித்துறைகளிலிருந்தும் மாணவர்களைக் கவரும் இந்தக் கல்வித்திட்டம், 19வது நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் தொழில் புரட்சியின் விளைவாக எழுந்த வணிக வளர்ச்சியை அறிவியல் சார்ந்து முகவாண்மை செய்யக்கூடிய தேவை ஏற்பட்டதை யடுத்து, உருவாக்கப்பட்டது. இந்தக் கல்வித்திட்டத்தின் மையமாக அமைந்துள்ள பாடங்கள் மாணவர்களுக்கு வணிகத்தின் பல்வேறு கூறுகளான கணக்குப்பதிவு, நிதிமேலாண்மை, சந்தைப்படுத்துதல், மனிதவளம், இயங்கு மேலாண்மை போன்றவற்றிற்கு அறிமுகப்படுத்துகின்றன. இக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் பொதுவான வணிக மேலாண்மை பாடத்திட்டத்தையோ அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த படிப்பில் கூர்ந்து படிக்கவோ இயலும். வணிக மேலாண்மை பட்டமேற்படிப்புகளின் தரத்தையும் நிலைத்திறனையும் கண்காணித்து செல்வாக்களிக்கும் அமைப்புகள் உள்ளன. பல நாடுகளிலும் வணிகவியல் பள்ளிகள் முதுகலை வணிக மேலாண்மைக் கல்வியை முழு நேரம், பகுதி நேரம், நிறுவன அதிகாரி மற்றும் தொலை கல்வி மாணவர்களுக்கு ஏற்றவாறு தகுந்த துறைசார் குவியத்துடன் அமைத்துள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.