முதலிரவு

இந்தியப் பண்பாட்டில் இல்லறவாழ்வைத் தொடங்கும் புதுமணத் தம்பதியர், திருமணத்தன்று வரும் இரவை தனியறையில் கழிப்பர். அந்த இரவு அவர்களின் முதலிரவு என அழைக்கப்படும். புதுமணத் தம்பதியரைத் தனியறைக்கு அனுப்பும்முன் சில சம்பிரதாயச் சடங்குகள் இந்தியாவில் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகள் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்தச் சடங்கைத்தொடரும் இரவு 'சாந்தி முகூர்த்தம்' என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

இந்திய சமூகத்தில் மிகப்பெரும்பாலும் குடும்பத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களே நடைபெறுகின்றன. மணமக்கள் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாகப் பழகுவதும், உடலுறவு கொள்வதும் நடப்பதில்லை. எனவே திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தமது இல்லற வாழ்கையை சிறப்புடன் அமைத்துக்கொள்ள குடும்பத்தினரால் தரப்படும் ஒரு பயிற்சியாக 'முதலிரவு' கருதப்படுகிறது. தம்பதியர் தமது கூச்சத்தை விலக்கி, தமக்குள் நெருங்கிப் பழக இச்சடங்கும் சம்பிரதாயமும் அடிகோலும் என நம்பப்படுகிறது.

ஏற்பாடுகள்

மணமக்கள் தங்கவிருக்கும் தனி அறையில் புதிய படுக்கை போடப்பட்டு பொதுவாக மலர்களால் அலங்கரிக்கப்படும். அறை முழுவதும் நறுமணம் வீசும் வகையில் செய்யப்படும். தனித்திருக்கையில் உண்டு மகிழும் வகையில் பலகாரங்களும் பழங்களும் தட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.