மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மலேசியா, பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் அமைந்து உள்ளது. கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி, இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி என்று இருந்த இரு தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப் பட்டு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று ஒரு புதிய கூட்டுப்பள்ளி உருவானது.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி SJKT Mak Mandin | |
---|---|
அமைவிடம் | |
பட்டர்வொர்த், பினாங்கு, மலேசியா | |
தகவல் | |
வகை | ஆண்/பெண் இரு பாலர் பள்ளி |
தொடக்கம் | 1970 |
நிறுவனர் | உமையவள் இந்து சபா பட்டவொர்த் இந்தியர் சங்கம் |
பள்ளி மாவட்டம் | செபாராங் பிறை |
கல்வி ஆணையம் | மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி |
பள்ளி இலக்கம் | PBD2076 |
தலைமை ஆசிரியர் | கரு.இராஜமாணிக்கம் |
தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
மாணவர்கள் | 1010 |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
பட்டர்வொர்த் நகரில் இருக்கும் மாக் மண்டின் தொழில்பேட்டையில் இப்பள்ளி அமைந்து இருப்பதால் அப்பெயரிலேயே மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்றும் அழைக்கப் பட்டு வருகின்றது.
வரலாறு
1973 ஆம் ஆண்டுக்கு முன்னர் பட்டர்வொர்த் நகரில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் செயல் பட்டு வந்தன. முதல் தமிழ்ப்பள்ளி: கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி என்று அழைக்கப் பட்டது. இப்பள்ளி ‘உமையவள் இந்து சபா’வின் ஆதரவில் இயங்கி வந்தது. அப்பள்ளியில் முதல் மூன்று வகுப்புகள் மட்டுமே போதிக்கப் பட்டு வந்தன.
இரண்டாவது தமிழ்ப்பள்ளி: இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை பாடங்கள் போதிக்கப் பட்டன. இவ்விரு பள்ளிகளையும் ஒன்றிணைத்து 573 மாணவர்களுடன் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி எனும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.
பி.இராஜகோபால்
1970 களில் இப்பள்ளிக்கு தனிக் கட்டடம் என்று எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அது ஒரு தேசியப் பள்ளியுடன் இணைந்து செயல் பட்டு வந்தது. அப்பள்ளியில் முதல் தலைமையாசிரியர் பொறுப்பை பி.இராஜகோபால் என்பவர் ஏற்று இருந்தார். அப்போது 14 ஆசிரியர்கள் பணியாற்றினர்.
1980 ஆம் ஆண்டில் மு.அர்ஜுனன் என்பவர் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார். மாணவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. பின்னர், 1986-இல் கு.மோகன் என்பவர் தலைமையாசிரியர் ஆனார்.
டத்தோ பி.கே.சுப்பையா
அக்கால கட்டத்தில் இப்பள்ளிக்குத் தனிக் கட்டடம் இல்லை என்ற ஏக்கம் இவ்வட்டாரத் தமிழ் ஆர்வலர்களிடையே பரவலாக நிலவி வந்தது. பினாங்கு மாநில ம.இ.கா. முன்னாள் தலைவர் டத்தோ தெ.சுப்பையா, டத்தோ கு.இரஜபதி, டத்தோ பி.கே.சுப்பையா, பள்ளி நிர்வாக வாரியத் தலைவர் ஜி.இரத்தினசாமி, டத்தோ ஆர்.அருணாசலம், சா.பெரியகருப்பன், பி.சண்முகம், ச.தாமோதரன், எம்.சுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒன்றிணைந்து இப்பள்ளிக்கு ஒரு தனி நிலம் கிடைக்க அரும் பாடு பட்டனர்.
1994-இல் புதிய கட்டடம் கிடைத்தது. 2003 ஆம் ஆண்டில் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்களின் உதவியோடு கல்வி அமைச்சின் ஆதரவில் பள்ளிக்கு மூன்று மாடிக் கட்டடம் ஒன்று கட்டப் பட்டது.
செபராங் ஜெயா அரிமா சங்கம்
இக்கட்டடப் பணிக்கு டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம், ஜி.இரத்தினசாமி, பொது மக்கள் மற்றும் பட்டர்வொர்த் வட்டார சமூக அமைப்புகளைச் சார்ந்தோரும் பெரும் ஆதரவுகளை வழங்கினர்.
2005 ஆம் ஆண்டு செபராங் ஜெயா அரிமா சங்கம் மற்றும் பட்டர்வொர்த் அரிமா சங்கம் போன்றவற்றின் ஆதரவில் பள்ளியில் ஒரு கணினிக்கூடம் நிறுவப் பட்டது.
தமிழ் பாலர் பள்ளி
2002 ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் மாக் மண்டின் தமிழ் பாலர் பள்ளி அமைக்கப் பட்டது. 2009 ஆம் ஆண்டில் மலேசியச் சமூக கல்விக் கழகம் (Malaysia Community Education Fund) இரு பாலர் வகுப்பறைகளைக் கட்டித் தந்தனர்.
பள்ளி விளையாட்டுத் திடல்
2007 ஆம் ஆண்டு டத்தோ பி.கே. சுப்பையாவின் ஆதரவில் கல்வி அமைச்சிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கப் பெற்றது. அதன் வழி பள்ளி விளையாட்டுத் திடல் சீரமைக்கப் பட்ட்து.
2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநில அரசாங்கத்தின் உதவியில் 80,000 ரிங்கிட் செலவில் பள்ளியைச் சுற்றிலும் ஆறு அடி உயரத்திற்கு சுவர் அமைக்கப் பட்டது. மறு ஆண்டு மாநில அரசாங்கத்தின் நிதி உதவியால் பள்ளிச் சிற்றுண்டிச்சாலை விரிவாக்கம் கண்டது.
பள்ளி நிர்வாகம்
இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் கரு.இராஜமாணிக்கம் 2010 ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதைப் பெற்றார். அவருடைய கால கட்டத்தில் பள்ளி பல வகைகளில் வளர்ச்சி கண்டுள்ளது.
அவர் பணி புரிந்த காலத்தில் பள்ளியில் இசைக் குழு அமைக்கப் பட்டது. காற்பந்து, வலைப்பந்து, மும்மொழிப் போட்டி முதலியவற்றில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி பல்வேறு பரிசுகளைப் பெற்று வாகை சூடியுள்ளது.
2010 ஆம் ஆண்டில் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1010 ஆக உயர்ந்தது. அந்த ஆண்டு யு.பி.எஸ்.ஆர். தேர்வில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாநில அளவில் சாதனையையும் படைத்தது. 13 மாணவர்கள் 7A க்கள் பெற்றனர். இது ஒரு சாதனை. 13 மாணவர்கள் 6A + 1B, மற்றும் 7 மாணவர்கள் 5A + 2B க்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.