மள்ளனார்

மள்ளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை: குறுந்தொகை 72, நற்றிணை 204. இரண்டும் அகப்பொருள் பற்றியவை.

மள்ளன் என்னும் சொல் உழைப்பாளியைக் குறிக்கும். வயலில் உழைப்பவனையும், போர்களத்தில் உழைப்பவனையும் குறிக்கும் வகையில் இச்சொல் சங்கநூல்களில் பயிலப்பட்டுள்ளது. இப்புலவர் இவர்களில் ஒருவர்.

பாடல் சொல்லும் செய்திகள்

  • களைக்கட்டுக் கருவியால் மண்ணைப் பரித்துவிட்டுத் தினை விதைப்பர்.[1]
  • தலைவன் பாங்கனுக்குக் கூறுதல்
தினைப்புனத்தில் அவள் குருவி ஓட்டிக்கொண்டிருந்தாள். அவன் கண் நாற்புறமும் சுழன்றுகொண்டிருந்தது. அப்போது அது தாமரைப் பூவைப் போல இருந்தது. அவள் என்னைப் பார்த்துவிட்டாள். அப்போது அந்தக் கண் அம்புபோல் பாய்ந்து துன்பம் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. அவள் கண்ணம்பு பாயும்போது நான் அவளது தோளழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 'சோ' என்று குருவி ஓட்டும் அவளது 'தேமொழி'யைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தலைவனிடம் மாறுபாடு கண்டு வினவிய பாங்கனுக்குத் தலைவன் இவ்வாறு சொல்கிறான்.[1]
  • தலைவன் தன் நெஞ்சோடு பேசுதல்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' (நற்றிணை 204)
கொடிச்சி கானவனோடு [2] கொடிச்சிஇருந்துவிட்டுப் தன் சிறுகுடிக்குப் பெயர்ந்து செல்கிறாள். அவளது பின்னழகைப் பார்த்துக்கொண்டிருந்த கானவன் நெஞ்சு பேசுகிறது. நான் அவளிடம் இனிமையாகப் பேசினேன். அவள் என் நெஞ்சு உண்ணும்படி மறுமொழி பகர்ந்தாள். உடனே நான் உன் கூர் எயிறு உண்ணட்டுமா என்றேன். உடனே அவள் வளைத்துப் பிடித்த மூங்கிலைக் கை விட்டால் நிமிர்வது போலச் சென்றுவிட்டாள். ஆண்மானை விட்டுப் பிரியும் பெண்மானைப் போலப் பிரிந்துவிட்டாள். தளிர் சேர்த்துத் தொடுக்கும் தழையாடை தைத்து விளையாடிவிட்டு வருக என அவளது தந்தை அனுப்பக், குளிரும் காட்டுக்குப் பொழுது போகும் நேரத்தில் வருவாளோ மாட்டாளோ? குவளை பூத்திருக்கும் சுனையில் புணர்ந்து விளையாட மலைச்சாரலுக்கு வருவாளோ, மாட்டாளோ? இப்படியெல்லாம் எண்ணுகிறான்.[3]

அடிக்குறிப்பு

  1. குறுந்தொகை 72
  2. குறிஞ்சி நிலத் தலைவன் கானவன்; தலைவி கொடிச்சி - குறிஞ்சி பருவத்தால் திரிந்து பாலையான நிலத்துக்கும் இவர்கள் தலைவர்கள்
  3. நற்றிணை 204
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.