மலைவலம்

மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதலாகும். கயிலை மலையை வலம் வரும் பழக்கம் இருந்துவருகிறது. கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இவ்வாறு பல இடங்களில் பெரும்பாலும் பௌர்ணமி நாளன்று மலைவலம் வரும் நிகழ்வு நடந்தாலும், குறிப்பாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல மலையை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மிகப் பிரபலமாக உள்ளது. புராண காலம் முதல் இன்று வரையில் மலைவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மலைவலப் பாதை, திருவண்ணாமலை, வலது பக்கத்தில் சுரிய லிங்கம்

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள்

  1. இந்திர லிங்கம்
  2. அக்னி லிங்கம்
  3. எம லிங்கம்
  4. நிருதி லிங்கம்
  5. வருண லிங்கம்
  6. வாயு லிங்கம்
  7. குபேர லிங்கம்
  8. ஈசான்ய லிங்கம்

ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.