மலையனார்

மலையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 93.

மலையன் பெயர் விளக்கம்

மலையன் என்னும் பெயர் முருகனைக் குறிக்கும். முருகன் 'குன்றுதோறு ஆடும் குமரன்'. மைவரை உலகத்தில் சேயோன் மேவி இருக்கிறான். மலையனார் கடவுள் பெயரைப் பெற்ற புலவர். இது இறையனார் என்னும் பெயரைப் போன்றது.

பாடல் சொல்லும் செய்தி

பெருங்கல் நாடன்

தேன்கூட்டுப் பழம் தொங்கும் மலை அது. மலை அணிந்திருக்கும் மாலைபோல் அருவி அதில் தொங்கும். இம்மலையில் விளையும் கூலமெல்லாம் (தானியமெல்லாம்) பிலத்தில் (குகையில்) தானே புகுந்துகொள்ளும் மலை அது. இந்த மலையை விட்டுப் பிரிந்தவர்கள் பிரிந்து வந்துவிட்டோமே என்று வருந்துவர். இத்தகைய மலைநாடன் தலைவன்.

பழங்கண் மாமை

நுசும்பு
மருங்கு
  • புன்கண் = (கண் = நெஞ்சக் கண், நினைவு) புன்மையான நினைவு, துன்பப்படுகிறோம் என்னும் நினைவு.
  • பழங்கண் = பழமை நல மகிழ்ச்சி.
  • மருங்கு = (மருங்குல்) இடுப்புக்குக் கீழ்ப் பருத்திருக்கும் துடையின் மேற்பகுதி.
  • நுசும்பு = இடுப்புக்கும் மருங்குலுக்கும் இடையில் சுருங்கிக் கிடக்கும் இடுப்பு.

தலைவி பழங்கண் மாமை உடையவள். மாமை என்பது அம்மை கொண்ட அழகு. அவள் மருங்கை மறைக்கும் அளவுக்கு அணிகலன்களைப் பூண்டிருந்தாள். பருத்த தோளை உடையவள். அவளது நுசும்பு நல்கூர்ந்து மெலிந்திருந்தது. ஆகம் என்னும் மார்பில் பூண் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த உடலில் காணப்பட்ட நாணந்தான் அவளுக்குப் பழங்கண்.

உயிர்க் குறியெதிர்ப்பு

ஒன்றைக் கொடுத்து அதற்குக் கைம்மாறாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்வது 'குறியெதிர்ப்பு'. காதலர் தமக்குள்ளே உயிரைக் கொடுத்து உயிரைப் பெற்றுக்கொள்வர் என்கிறார் இந்தப் புலவர்.

உயிரைக் கொடுத்துவிடலாம். வாங்கியவரிடமிருந்து அவரது உடைமையைத் திரும்பப் பெறுவதுதான் அரிய செயலாக உள்ளது என்கிறாள் தலைவி. திருமணந்தான் கொடுத்த உயிரைத் திரும்பப் பெறுவது என்கிறாள் பாடலின் தலைவி.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.