தூய யோசவ் வாஸ் மகா வித்தியாலயம்

தூய யோசவ் வாஸ் மகா வித்தியாலயம் இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.

வரலாறு

இப் பாடசாலை வரலாற்று பழமை வய்ந்த விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம் அருகில் அமைந்துள்ளது. விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1900ம் ஆண்டிற்கு முன்னர் புனித யாகப்பராலயத்தின் காணியை யாழ் மறைமாவட்டக் கத்தோலிக்கத் திருச்சபை ஆரம்ப பாடசாலை கட்டுவதற்கென வழங்கியது.

இப் பாடசாலையில் கத்தோலிக்க மாணவர்கள் மாத்திரமன்றி பல மதத்தினரும் கல்வி கற்று வருகின்றனர். ஆரம்பப் பாடசாலையாக இருந்த இது நாளடைவில் 10ம் வகுப்பு வரை நிறைவுற்ற கலாசாலையாக வளர்ச்சியடைந்தது. 1960ம் ஆண்டு இப் பாடசாலை இலங்கை அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.

அதிபர்களின் சேவை

கத்தோலிக்க குருக்களின் வழிகாட்டுதலாலும்,மூதாதையரின் விடாமுயர்ச்சியாலும் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலை நாளடைவில் 10ம் வகுப்பு வரை நிறைவுற்ற கலாசாலையாக சில வருடங்களில் வளர்ச்சியடைந்து பெருமை கொண்டது.

1960ம் ஆண்டு இப் பாடசாலை அரசினால் சுவீகரிக்கப்பட்டது. விடத்தலம் பதியை பிறப்பிடமாகக் கொண்ட திரு. இ. திருச்செல்வம் அதிபராகக் கடமையாற்றிய போது பாடசாலையின் கட்டிடங்கள் பாடசாலை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் புதிதாகவும், திருத்தம் செய்தும் அமைக்கப்பட்டன. இவ் புனருத்தாரன வேலையில் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளராக திரு. அ. அந்திரேஸ் தன்னலமற்ற கடமையுணர்ச்சியுடன் செயர்ப்பட்டார்.

1968ம் ஆண்டில் அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சி தாம் வகுத்த பாடசாலைப் புனரமைப்பு திட்டத்திற்கேற்ப இப் பாடசலையின் தரத்தை 7ம் வகுப்பு வரை குறைத்தது. 8ம்,9ம்,10ம் வகுப்பு மாணவர்களை அயலிலுள்ள முஸ்லிம் பாடசாலைக்கு செல்லுமாறு பணித்தது. துரதிஸ்டவசமான இச் சந்தர்ப்பத்தில் பெற்றோரும் மாணவர்களும் கலங்கி நின்ற நேரத்தில் பேசாலையப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சில்வஸ்ரர் அன்ரனி துரம் அதிபராக நியமிக்கப்பட்டார். இவ் வதிபரின் தீவிர முயர்ச்சியாலும் பாடசாலையின் உதவி அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த திரு.ப.பெனடிக்ற், திரு. சு.சூசைப்பிள்ளை ஆசிரியர்களது பூரண ஒத்துழைப்பாலும் பெற்றோரின் ஊக்கத்தாலும் 10ம் வகுப்பு வரை தரத்தை உயர்த்த முயர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின் 1969ம் ஆண்டு இப் பாடசாலை மீண்டும் 10ம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டது. 1970ம் ஆண்டு இப் பாடசாலை மகா வித்தியாலய அந்தஸ்த்திற்கு தரம் உயர்த்துவதற்கு ஆரம்பப்படியாக தற்காலிக உத்தரவு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது. பாடசாலையின் இடவசதியை கூட்டும் நோக்கில் சில தனியார் தங்கள் காணிகளை நன்கொடையாக வழங்கினர்.

1972ம் ஆண்டில் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு.சு.சந்தியாப்பிள்ளை அதிபராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் படசாலை மைதானம் திருத்தம் செய்யப்பட்டது. பாடசாலை மைதான புனரமைப்பு எமது ஊரைச் சார்ந்த ஆசிரியர் திரு. சு.இம்மானுவேலின் தலைமையில் கிராம இளைஞ்ஞர்களின் தன்னலமற்ற உடல் உழைப்பினாலும் சிறப்பாக புனரமைப்பு செய்யப்பட்டது. அத்துடன் இவரது காலத்தில் ஒரு விஞ்ஞான கூடமும் உருவாக்கப்பட்டது.

கலாமன்ற வளர்ச்சி

1973ம் ஆண்டளவில் இப்பாடசாலையில் கலாமன்றம் உருவாக்கப்பட்டு திரு. அந்தோனி முத்து ஆசிரியர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பல நாடகங்கள் மன்னார் மாவட்ட ரீதியில் அரங்கேற்றப்பட்டன.

உசாத்துணை

  • சமூக ஒளி நூல் 1974ல் வெளியிடப்பட்டது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.