மனப்பாடம் செய்தல்

மனப்பாடம் செய்தல் (Rote learning) ஒரு கற்கும் முறை ஆகும். இந்த முறையில் கற்பவர் திரும்ப-திரும்ப, கற்க வேண்டியதைக் கேட்பார் அல்லது படிப்பார். நினைவாற்றல் இந்த முறையின் அடிப்படை ஆகும்.

மனப்பாடம் செய்தலும் புத்தியை தீட்டி யோசித்தலும்

மனப்பாடம் செய்தல் படித்த அல்லது கேட்ட ஒன்றை நினைவுக்கு கொண்டு வர மிகவும் பயன்படும். எடுத்துக்காட்டாக இது தொலைபேசி எண்ணை நினைவுக்கு கொண்டு வரும். இந்த முறை அடிப்படை கற்றலுக்கு மிகவும் பயன்படும். இது சிறு வயதில் பெருக்கல் அட்டை, எழுத்துக்கள், எண்கள் ஆகியவற்றை கற்க இன்றியமையாததாகும். கணித வாய்ப்பாடுகளையும், வேதியியல் வாய்ப்பாடுகளையும் நினைவுக்கு கொண்டு வர இம்முறை பயன்படுகிறது. புதிய பாடத்திட்டங்கள் இந்த வாய்பாடுகள் எவ்வாறு வருகின்றன என்று மாணவர்கள் அறிய வழி வகுக்கின்றன. இந்த முறை ஒரு பாடத்தை அடிப்படையாக கற்க பயன்படுகிறது; ஆனால் பாடத்தின் ஆழத்தில் சென்று படிக்க பயன்படுவதில்லை. மனப்பாடம் செய்தவர்கள் தாங்கள் எழுதியதை அல்லது படித்ததை புரிந்து கொண்டதாக தவறான கண்ணோட்டம் கொள்ள வாய்ப்புள்ளது. இந்த முறை மேலைநாடுகளின் புதிய பாட திட்டங்களில் தவிர்க்க முயற்சிக்கப்பட்டாலும் கணிதத்தில் மனப்பாடத்திற்கு அவசியம் இருப்பது ஏற்கப்பட்டுள்ளது.

நிறைய தகவல்களை மனப்பாடமாக வைத்திருப்போர் நல்ல முறையில் முடிவுகள் எடுக்கும் திறமை வாய்ந்தோராக உள்ளனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. உதாரணமாக தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் முடிவெடுக்கும் திறமைக்கு அவரது சிறந்த மனப்பாடத்திறமை காரணமாகக் கூறப்படுகின்றது.[1]

பாடல் முறையில் அமைந்திருக்கும் கணித சூத்திரங்கள், சிற்ப சாத்திரங்கள், வர்ம சூத்திரங்கள், களரி அடி முறைகள் என பலவும் மனப்பாடம் செய்ய முற்காலத்தில் சுலபமாக இருந்ததால் நினைவுக்குக் கொணர எளிதாக அமைந்தன.ஆங்கிலேயரின் உரைநடைக் கல்விமுறை இத்திறமையை வழக்கொழித்தது எனும் குற்றச்சாட்டும் உள்ளது.[2]

நாடுகளும் கலாச்சாரங்களும் பின்பற்றுபவை

இந்த மனப்பாடம் செய்தல் முறை இந்தியா,பிரேசில்,பாகிஸ்தான்,சீனா,மலேசியா,சிங்கப்பூர்,ஜப்பான்,ரோமானியா,இத்தாலி,துருக்கி ஆகிய நாடுகளின் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நாடுகளில் உள்ள மாணவர்கள் உலக அளவில் நடக்கும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவர்.சீனாவில் இந்த முறை மிகவும் பாராட்டப்படும்.

இந்த முறை பல நாடுகளில் பாராடப்பட்டவை ஆகும். இது சீனாவிலும் ஜெர்மனியிலும் அறிவு மாணவர்கள் மீது தள்ளும் முறை என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு பிரெஞ்சிலும் சிறப்பு பெயர் உண்டு.

இந்த முறை இந்தியாவில் மிகுதியாக பின்பற்றப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் பெருக்கம் அட்டைகளையும், பாடல்களையும் படிக்க வேண்டும். உதாரணத்திற்கு, தமிழ் மாணவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்ய வேண்டும்.

மனப்பாடம் முறையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள்

அமெரிக்கா

அமெரிக்காவில் என்.சி.டி.எம்(NCTM) என்ற அரசாங்க உறுப்பு தம் மாணக்கர்கள் சுறுசுறுப்பாக கற்கவும், நன்றாக ஆராயவும் வழி வகுக்கின்றன. கணிதத்திலும் அறிவியலிலும் பெருக்கல் அட்டைகளையும், நீர் கொதிக்கும் வெப்பம் ஆகியவற்றை மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி நீடித்து வருகிறது.

இந்தியா

2009 ஆம் ஆண்டு இறுதியில் 3 இடியட்ஸ் என்ற படம் வெளியானது. இதில் இந்திய நாட்டின் கல்வி பிரச்சனைகள் காட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து மத்திய மந்திரியான கபில் சிபல் பல நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக சி.பி.எஸ்.சி(CBSE) என்ற மத்திய பாடத் திட்டத்தில் பல மாற்றங்களை மனப்பாடம் முறையை ஒழிக்கக் கொண்டு வந்தார். ஆனாலும், இம்முறைகள் இந்திய மாநில பாடத்திட்டங்களில் குறைவான மாற்றங்களையே கண்டன.

மதங்கள்

இம்முறை பல மதங்களில் இடம் பெறுகின்றது. இந்திய மதங்களான இந்து மதத்திலும், புத்த மதத்திலும் இடம் பெறுகின்றது. முஸ்லிம் மாணவர்கள் இம்முறையில் குரானை கற்கின்றனர். யூதர்களும், கிறிஸ்துவர்களும் இம்முறையில் தங்கள் மதப்புதங்கங்களைக் கற்கின்றனர். இம்முறை புத்தகங்கள் தோன்றியதற்கு முன் மத சட்டங்களையும், தகவல்களையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வழி வகுத்தது.

கணிதம்

இம்முறை கணித வாய்ப்பாடுகளை கற்க மிகவும் பயன்படுகின்றன. குறிப்பாக மனப்பாடம் செய்தலும், புத்தியைத் தீட்டி யோசித்தலும், அவற்றால் பெற்ற முடிவுகளும், கணித பாடத்தை முழுமையாக கற்க இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன.

இசை

வேதங்களும்,வேதத்தின் பகுதியான உபநிடதங்களும், தமிழ் இலக்கியங்களும் இம்முறையில் கற்கப்பட்டன. ஒரு இசையை தொடர்ந்து கேட்டால் அந்த இசை கேட்பவர் மனதில் பதிந்து விடும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.