நினைவக உயிரணு

உயிரியலில், நினைவக உயிரணு (Memory cells) என்பது, நமது உடலில் உள்ள, நோய் எதிர்க்கும் திறனை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்ட ஒரு வகை உயிரணு ஆகும். இவைகள் நோய்க்காரணிகள் (எ.கா. தீ நுண்மங்கள், பாக்டீரியாக்கள்) நமது உடலில் நுழையும் போது, அவற்றிற்கு எதிரான நோய் எதிர்ப்புத் தன்மைக்காக வெளிப்படுத்தப்படும் பாதுகாப்பு அரண் ஆகும். நமதுடலில் இருக்கும், நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக்கான தொகுதியானது, குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணியாலான பிறபொருளெதிரியாக்கியை எதிர்கொள்ளும்போது, நீண்ட வாழ்க்கைக்காலத்தைக் கொண்ட நினைவக உயிரணுக்களை உருவாக்கும். மீண்டும் ஒருமுறை அதே நோய்க்காரணியை எதிர்கொள்ள நேரிட்டால், நினைவக உயிரணுக்களின் தொழிற்பாட்டால், மீண்டும் அதே நோய் ஏற்படல் தவிர்க்கப்படுகின்றது. ஒருமுறை ஏற்படும் நோய்த் தொற்றை நினைவில் கொண்டிருந்து, அந்த நோய் மீண்டும் வராமல் தடுப்பதற்கான செயல்முறையை செய்வதனாலேயே, இப்பெயர் இடப்பட்டிருக்கின்றது.

நினைவக உயிரணுக்கள் என்பவை வெண்குருதியணுக்களின் ஒரு பிரிவான நிணநீர்க் குழியங்களில் இருக்கும் B உயிரணுக்களும், T உயிரணுக்களும் ஆகும். நினைவக B உயிரணுக்கள் (en:Memory B cell) குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான பிறபொருளெதிரியை மிக அதிகளவில் உருவாக்குவதாலும், நினைவக T உயிரணுக்கள் (en:Memory T cell) உயிரணுசார் நோய் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுவதாலும், நோயிலிருந்து உடலைத் தப்ப வைத்துப் பாதுகாக்கின்றது.

பொதுவாக அம்மை போன்ற தீ நுண்ம நோய்கள், ஒரு முறை வந்தால் பின் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. காரணம், ஒரு முறை அம்மை நமது உடலில் வந்தவுடன், நமது பாதுகாப்பு அரண்களான வெண்குருதியணுக்கள், நினைவக உயிரணுக்களை (B and T memory cells) தோற்றுவிக்கும். இந் நினைவக உயிரணுக்கள், நமது உடலில் நிலைத்து இருப்பதனால், குறிபிட்ட நோய்க்காரணிகள் மறுபடியும் வருமாயின், ஏற்கனவே தயார் நிலையில் இருந்து, அவைகளை எதிர்த்து அழிகின்றன. (வெகு அரிதாக சிலருக்கு மறுபடியும் வந்தாலும், அதற்கான காரணம் வேறாக இருக்கும். சில வேளைகளில் தீ நுண்மங்கள், நிறப்புரியில் பிணைந்து, பல ஆண்டுகளுக்கு பின் தனது மெய் முகத்தைக் காட்டுவதால், அவ்வாறு ஏற்படலாம்.)

இந்த நினைவக உயிரணுக்கள் சில நோய்களுக்கு எதிராக இல்லாதிருப்பது அவதானிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு முறை வரும் தடிமன் (சலதோசம்), வாழ்நாளில் பலமுறை வருகிறது. ஏன் அதற்கான நினைவக உயிரணுக்கள் இல்லையா என வினா எழுகின்றது. அம்மை நோய் வந்தால் பத்து முதல் 15 நாள் வரை நமது உடலில் இருக்கும். இக்கால இடைவெளியில், நமது உடலின் பாதுகாப்பு அரண், எதிர்காலத்திற்கு தேவையான நினைவக உயிரணுக்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் தடிமன் நோயின் மூலமான ரினோ நுண்மம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே உடலினுள் இருப்பதனால், அதற்கான நினைவக உயிரணுக்களை நமது உடலில் உருவாக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.