மந்த வளிமம்

பொதுவாக இவ்வுலகிலும் அண்டத்திலும் உள்ள எல்லா தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று வினைபட்டு பல்வேறு வகையான சேர்மங்களைத் தருகின்றன. ஆனால் மந்த வளிமங்கள் (மந்த வாயுக்கள், Inert gases) எனப்படுபவை பிற தனிமங்களுடன் மிகமிகப்பெரும்பாலும் சேர்ந்து வினை புரிவதில்லை. இவை உறழ் வளிமம், செயலறு வளிமம், சடத்துவ வாயு, மந்த வளிமம் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. ஈலியம், ஆர்கான், நியான் முதலான தனிமங்களில் மந்த வளிமமாக இருப்பனவற்றின் அணுக்களின் அமைப்பைப் பார்த்தால், அவற்றின் அணுக்கருவைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைகளில் உலாவரும் எதிர்மின்னிகள், அந்த அந்த சுற்றுப்பாதைகளில் இருக்கக்கூடிய, உச்ச எண்ணிக்கையான அளவில் நிறைந்து இருப்பதால், வேதி வினைக்குத் தேவைப்படும் எதிர்மின்னிக் குறைவோ, தனித்து நிற்கும் எதிர்மின்னிகளோ இல்லாததால், வேதி வினைகளில் பங்கு கொள்ளாத வளிமங்களாக இவை இருக்கின்றன.

தனிமங்களில் அட்டவணையில் உள்ள நியான் என்பது ஒரு மந்த வளிமம். இதில் உள்ள மொத்தம் 10 எதிர்மின்னிகளில் முதல் இரண்டும் முதல் எதிர்மின்னிச் சுற்றுப்பாதையிலும், இரண்டாவது சுற்றுப்பாதையில் உச்ச வரம்பாக இருக்கக்கூடிய 8 இடங்களையும் மீதமுள்ள 8 எதிர்மின்னிகளும் நிரப்பி உள்ளதால், வேதி வினைக்கு உட்பட தனியாக இருக்கும் எதிர்மின்னிகளோ, குறையாக நிரப்பிக்கொள்ளும் இடங்களோ இல்லாததால், இது ஒரு செயலறு மந்த வளிமம்.

கீழ்க்காணும் அட்டவணையில் அணுவினுக்குள் உள்ள எதிர்மின்னி வலயங்களில் ஒவ்வொரு வலயத்திலும் உச்ச எண்ணிக்கையாக எவ்வளவு எதிர்மின்னிகள் இருக்கலாமோ அவ்வளவு எதிர்மின்னிகள் இந்த மந்த வளிமங்களில் இருப்பதைப் பார்க்கலாம்.

அணுவெண்
Z
தனிமம்எதிர்மின்னிகளின் எண்ணிக்கை/எதிர்மின்னி வலயம்
2ஈலியம்2
10நியான்2, 8
18ஆர்கான்2, 8, 8
36கிரிப்டான்2, 8, 18, 8
54செனான்2, 8, 18, 18, 8
86ரேடான்2, 8, 18, 32, 18, 8

மந்த வளிமங்கள் தனிமங்களாக மட்டும் இருக்க வேண்டும் என்றில்லை. இவை சேர்மங்களாகவும் இருக்கலாம்.

பயன்கள்

இவை பலதரப்பட்ட பயன்களை விளைவிக்கின்றன. இவை மற்ற பொருட்களுடன் வினைபுரியாத் தன்மை கொண்டிருப்பதால் எங்கெல்லாம் வேதிவினைகள் தவிர்க்ப்பட வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுகின்றன.

  1. உணவுப் பொருட்கள் போக்குவரத்தின் போது அவை கெட்டுப் போகாமல் தடுக்க
  2. பெட்ரோல் கலங்கள் வெடிக்காமல் தடுக்க
  3. பற்ற வைப்பு தொழிலில்

மந்த வளிமங்களின் குறும் பட்டியல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.