மதுரைப் போத்தனார்

மதுரைப் போத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.[1]

பெயர் விளக்கம்

  1. வெட்டி நட்டால் வளரக்கூடிய மரக்கிளையைப் போத்து என்பர். இவர் போத்து நட்டு மரம் வளர்த்த பெருமகனார்.
  2. மாடு, எருமை, புலி, மரைமான், புல்வாய்மான், மயில், எழால், நீர்வாழ் உயிரினங்கள் முதலானவற்றின் ஆண்களைப் 'போத்து' என்று வழங்கிவந்தனர்.[2]

மக்களில் ஆண்பாலாரின் மனப்பாங்கினை இப்புலவர் எண்ணிப் பார்க்கிறார். இந்த வகையில் இவரைப் பாடற்பொருளால் பெயர்பெற்ற புலவர் எனக் கருத இடமுண்டு.

பாடல் சொல்லும் செய்தி

பிரிவார் என்று கவலைப்பட்ட தலைவியைத் தோழி தேற்றுகிறாள். பிரியமாட்டார் என்கிறாள்.

'பொருளென வலித்த பொருளல் காட்சி'
பொருட்டாக மதிக்கத் தக்கது பொருள்தான் என்று கருதுவதானது உண்மையான பொருள் அல்லாத போலி உணர்வு

இதனை உணர்ந்தவர் பலர் அருள்தான் பொருள் என வாழ்வதில்லையா? ஆள்வினை ஆடவர்தான் அருள் இல்லாமல் அகல்வர். அருள்வினையாளர் இவர். பிரியமாட்டார் என்கிறாள்.

பழந்தமிழ்

இப்புலவர் அரிய பழந்தமிழ்ச்சொற்களைக் கையாண்டுள்ளார்.

  • கடறு = பாலைநில வழி
  • கரிந்த குதிர் மரம்= கருகிய மரப்போத்து
  • மைந்து = அருள் இல்லாத திண்ணிய நெஞ்சம்
  • செயிர்தீர் கொள்கை = மனமாசு இல்லாத கொட்பாடு
  • விறற் கவின் = வீரம் செறிந்த அழகு
  • ஆனா நோய் = பிறரால் தீர்க்க முடியாத மனநோய்

ஈங்கை

ஈங்கை மாரிக்காலத்திலும் தளிர் விடும். இந்தத் தளிர் போல் மகளிர் மேனி மென்மையானது.

அடிக்குறிப்பு

  1. அகநானூறு 75.
  2. தொல்காப்பியம் 1541 முதல் 1543
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.