மதுரைத் தத்தங்கண்ணனார்

மதுரைத் தத்தங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 335.

தத்தம் என்பது அக்காலத்தில் மதுரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட பெயர்.

'வாருரு கவரியின் வண்டுண விரிய முத்தின் அன்ன வெள் வீ' ... 'பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்' = இளநீர்

பாடல் சொல்லும் செய்தி

  • திணை - பாலை

பொருள் தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்.

நெஞ்சே! அருளானது பொருள் இல்லாதவர்களுக்கு அமையாது என்பதை நானும் அறிவேன். என்றாலும் கேள்! இளநீரினும் இனிய பற்களையும், அமிழ்தம் ஊறும் வாயையும் கொண்ட என் குறுமகளையும் உடன் கொண்டுசெல்வது என்றால் பொருள் தேடச் செல்வதும் இனிமையானதுதான்.

களிறு மராமரத்தைத் தன் கொம்பு முரியக் குத்தித் தன் பிடி உண்ணத் தரும் பாலைநிலத்தில் செல்வது எனக்கு எளிது. அவளுக்கு? எனவே அவளை உடன் கொண்டுசெல்லல் இயலாத ஒன்று.

மதுரையின் மதில்புறத்தில் இருக்கும் தென்னை மரத்தில் தூக்கணாங்குருவி கூடு கட்டியிருக்கும். அந்தத் தென்னையின் பாளை கொல்லன் தன் உலைக்களத்தில் வடிக்கும் வாள் இரும்பு போல் வயிற்றைக் காட்டிக்கொண்டு தோன்றும். பின் கவரி விசிறி போல் விரியும். விரியும் பாளையில் முத்துக்களைப் போல வீ(மலர்) மொட்டுகள் தோன்றும். அந்த மொட்டுகள் விளக்குமாற்றுச் சீவங்குச்சிகளில் தொங்கும் மழைநீர் ஆலங்கட்டிகள் போல வளரும். பின் இளநீர் ஆகும். அந்த இளநீர் போல அவள் எயிறு இனிக்கும்.

மாடமூதூர் (மதுரை) அடுபோர்ச் செழியனுக்கு உரியது. அதன் மதில்புறத்தில்தான் புலவர் கூறும் தென்னைமரம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.