மதுரைக் கூத்தனார்

மதுரைக் கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 334.

கூத்தன் = கூத்தாடிப் பிழைப்பவன். (இதன் பெண்பால் விறலி)

பாடல் சொல்லும் செய்தி

  • திணை - முல்லை

பகையரசர் திறை தந்தனர். நாடு திரும்புவோம். தேரை விரைந்து செலுத்து. - என்று தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். அப்போது பல செய்திகள் உவமை வாயிலாகவும், பிறவாறும் சொல்லப்படுகின்றன.

முரசம்

போரில் புறமுதுகிடாத யானைத் தோலைப் போர்த்திச் செய்வார்கள். வெற்றி பெற்றுத் திறை வாங்கும்போது இது முழக்கப்படும்.

மகளிர் கழங்கு விளையாடுதல்

கடலில் நீர் முகந்துசென்ற மேகம் யானையின் துதிக்கை போல மழைக்கால் இறக்கி மழைப் பனிக்கட்டிகளைக் கொட்டுவது கழங்கு விளையாடும் மகளிர் கையின் மணிக்கட்டை வளைத்துக் கழங்குக் காய்களை உருட்டுவது போல இருக்கும். கழங்கும் மழைப்பனிகட்டி அளவினதாகவும், நிறம் கொண்டதாகவும் இருக்கும்.

இப்படி மழை பொழியும் காலம் வந்துவிட்டது என்கிறான் தலைவன்.

படம் தேவதை செலுத்தும் தேர் - பாடல் தலைவன் வீற்றிருக்கப் பாகன் செலுத்தும் தேர் - "அன்னத்து நிரைபறை கடுப்ப நால்குடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர்

வெண்குதிரை 'நால்கு'(4) பூட்டிய தேர்

தேரில் நான்கு குதிரைகள் பூட்டப்படும். அந்தக் குதிரைக்ள் அன்னப் பறவை போல் வெள்ளைநிறம் கொண்டிருக்கும். அவை காலால் பேசிக்கொண்டு ஓடும்.

இன மயில் அகவும்

தேரோசை கேட்டு மயில்கூட்டம் அகவும்.

ஆய் சிறுநுதல்

தலைவி தாய்மை வனப்புடன் கூடிய சிறிய நெற்றியை உடையவள். அவளுக்கு 'ஒலி பல் கூந்தல்' (தளிர்த்த நெருக்கமான கூந்தல்) இருப்பதால் நெற்றி சிறுத்துக் காணப்படும்.

அவளை நான் பெற தேர்க்கால் ஈரநிலத்தைக் கிழிக்கத் தேரை விரைந்து செலுத்துக - என்கிறான் தலைவன்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.