மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 12 பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளன. அவை: அகநானூறு 56, 124, 230, 254, 272, 302, குறுந்தொகை 185, நற்றிணை 33, 157, 221, 344, புறநானூறு 329 ஆகியவை.

மூதில் முல்லையான்

ஊருக்குப் பக்கத்தில் நடுகல் இருக்கும். வீட்டில் காய்ச்சிய கள்ளை அதற்குப் பகடைப்பர். பலி உணவு ஊட்டுவர். நெய் பூசி நீராட்டுவர். மணப்புகை ஊட்டுவர். இது ஊரெல்லாம் கமழும்.

இப்படிப்பட்ட ஊரில் மூதில்லில் வாழ்ந்தவன்தான் ஒரு மூதின்முல்லையான். இவன் தன்னைப் புரந்த இல்லத்தார் வறுமையில் வாடினாலும் இரவலர்களின் இன்மையைப் போக்குபவனாக வாழ்ந்துவந்தான். அன்று அவன் வழங்கினான். இன்று நடுகல்லாய் இருக்கும் அவனுக்குப் படையல். என்ன விந்தை!

புறநானூறு 329

திதலை வாடல்

"பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி" இருக்கும் "ஒண் செங்காந்தள்"
  • திதலை = மேனிச்செழுமை

படமெடுத்த பாம்பு தன் படத்தைச் சுருக்கிக்கொள்வது போல் காந்தள் பூக்கும் நாடன் அவன். அவன் இரவில் இன்னலுற்று வருவதை எண்ணி என் நெற்றி பசக்கிறது. திதலை வாடுகிறது. பருத்த தோள் இளைக்கிறது. அதனால் வளையல் நழுவுகிறது. தலைவி தன் தோழியிடம் இப்படிச் சொல்லி அவன் இரவில் வருவதைத் தடுக்கிறாள்.

குறுந்தொகை 185

செல்வன் செல்லுங்கொல்

மலையில் யானையின் கை போல் வளைந்த தினைத்தோட்டம் காவலுக்குச் சென்றால் அந்த வழியாகச் சந்தனம் மணக்கும் அந்த மார்புச் செல்வன் சொல்வானோ மாட்டானோ என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். தொலைவில் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு சொல்கிறாள்.

நற்றிணை 344

வந்தீகு எந்தை

பாக! புதல்வன் தூக்கக் கலக்கத்தில் "வந்தீகு எந்தை" என்று வாய் முணுமுணுத்துக் கொண்டிருப்பான். அந்த அந்தீங்கிளவியை நான் கேட்கவேண்டும். விரைந்து தேரைச் செலுத்து என்கிறான் தலைவன்.

நற்றிணை 221

குயில் விளி

தலைவன் செல்லும் வழியில் மழை பொழிந்த மறுநாள் மரத்திலிருக்கும் குயில் கூவுகிறது. அதனைக் கேட்டதும் வேங்கைப்பூ கொட்டிக் கிடப்பது போல் மேனியில் தித்தி படர்ந்திருக்கும் தன் மாயோள் தன்னை நினைக்கிறாளோ என்று எண்ணித் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.

நற்றிணை 157

குறைக் கூண் நல்லில்

வழிப்பறி செய்யும் செந்தொடை மறவர் குறைந்து கூணிக் கிடக்கும் நல்லில்லில் வாழ்வர். அவர்கள் துவராடை(காவியுடை) அணிந்திருப்பர். அவர்கள் திரியும் வழியில் நீ செல்லப்போவதை எண்ணித் தலைவி என்னிடம் விம்முகிறாள். அவளது வனமுலையில் மலர்க்கண் புனல் பாய்கிறது. - இப்படித் தலைவனிடம் சொல்லித் தோழி தலைவன் பிரிவைத் தடுக்க முனைகிறாள்.

நற்றிணை 33

அறன் இல் யாய்

பள்ளிகொண்டிருக்கும் யானையின் முதுகை மலைவாழை தடவிக்கொடுக்கும் நாட்டை உடையவன் அவன். அவனோடு அருவி ஆடுதல், சுனையில் நீலமலர் பறித்தல், வேங்கைமரச் சோலையில் விளையாடுதல் போன்றவை இனி நிகழ வாய்ப்பில்லை பால் இருக்கிறது. தினையில் கிளி மேய்வதை அறிந்தும் தாய் அதனை ஓட்ட அனுப்பமாட்டாள் போல் இருக்கிறது. சுணங்கு அணிந்த என் முலையைப் பார்க்கிறாள். என் கூந்தல் அழகைப் பார்க்கிறாள். திரும்பத் திரும்பப் பார்க்கிறாள். (என்ன செய்வோம்) - இப்படித் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

அகம் 302

பணியலை முனியான்

வேங்கை மரத்தில் ஏறி மயில் அகவும் நாடன் அவன். அவன் தனியனாக வந்து நம்மைப் பணிதலில் வெறுப்பே இல்லாதவனாகக் காணப்படுகிறான். குளவிப் பூவையும், கூதளம் பூவையும் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொண்டு பூ மணம் கமழ வருகிறான். பெரிய பாறாங்கல்லுக்குப் பக்கத்தில் மிளகுக் கொடி ஏறிப் படர்ந்திருக்கும் நம் குரம்பை வீட்டில் அவன் நுழையும்போது அன்னை அவனை முருகு என என எண்ணி முகமனுரை கூறி வரவேற்கிறாள். அதனைக் கண்டு அவன் மெய்ம்மலி உவகை கொள்கிறான். இனி அவனோடு நமக்குள்ள தொடர்பு என்ன ஆகுமோ தெரியவில்லை! - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

அகம் 272

விளையாடு ஆயத்து இளையோர்

தலைவன் போர்தொழில் முற்றுப்பெற்று இல்லம் மீள எண்ணித் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். பாகன் உடனே ஊருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறான். அவன் வந்து சேர்வதற்கு முன் தலைவியின் நிலை என்ன? - தோழிமார் ஒன்றுகூடி விளையாடுவர். அவற்றை நரைத்த தலையினை உடைய பெண்கள் வேடிக்கைப் பார்ப்பர். அவளோ(தலைவியோ) முற்றத்தில் வீட்டுப்புறா தன் துணையுடன் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு என்னை நினைப்பாள். அவள் அஞர்(துன்பம்) இப்போது நீங்கியது. - என்கிறான்.

அகம் 254

விளையாட்டு ஆயம்

கழியில் மலர்ந்த நெய்தல் போல் கண். மாந்தளிர் மறைக்கும் அல்குல். சுணங்கு(=நாணம் தெறிக்கும் உடல்) பூத்த உடல். கூரிய பற்கள். மேகம் போல் இருண்ட கூந்தல். இவள்தான் வாணுதல் குறுமகள்.

இவள் விளையாட்டுத் தோழிமாரோடு பொன்போல் உதிர்ந்துகிடக்கும் புன்னை மலர்களை அள்ளித் தன் விளையாட்டு மனையில் (=மணல்வீட்டில்) சேர்த்துகொண்டிருந்தாள். தலைவன் இந்த விளையாட்டில் தன்னையும் சேர்த்துக்கொண்டால் தவறு உண்டோ என்கிறான்.

அகம் 230

துனி தீர்க் கொள்கைக் காதலி

ஊடல் இல்லாத கொள்கை உள்ளவள் அவன் காதலி. அவள் அரமியம் என்னும் நிலா முற்றத்தில் மாலை வேளையில் கோவலரின் குழலோசையைக் கேட்டுக்கொண்டு என்னை எண்ணிக்கொண்டிருப்பாள்.

பகைவர் பணிந்து தந்த திறையைப் பெற்ற மன்னன் அவர்களைச் சென்றுவாருங்கள் என்று வழிமொழிந்துகொண்டிருக்கிறான். இன்றே அவன் நாடு திரும்புதல் உறுதி. பாக! பூக்களில் ஊதும் வண்டுகள் பறந்தோட விரைவாகத் தேரைச் செலுத்துக - என்று தலைவன் தன் பாகனிடம் கூறுகிறான்.

அகம் 124

மெய்ம்மலி உவகை

தோழி! சிரிப்புத்தான் வருகிறது. எருமை ஆம்பல் இலை கிழிய, குவளைப் பூக்களை மேய்ந்தபின், காஞ்சிமர நிழலில் படுத்துக்கொண்டு அசைபோடும் துறையை உடையவன் அவன். அவன் புதிய பெண்களிடம் வதுவை(=வதிதல்) வைத்துக்கொண்டான். அவனது பாணன் தெருவில் வந்துகொண்டிருந்தான். அப்போது சினைப் பசு ஒன்று அவனை முட்ட வந்தது. அதற்குப் பயந்து அவன் நம் மனையில் நுழைந்துகொண்டான். அதைக் கண்ட நான் என் உடம்பெல்லாம் குலுங்க வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு, "உன் மனை இது அன்று" என்றேன். அதைக் கேட்ட அவன் தன் நெஞ்சிலுள்ள மம்மரை(=மாசை) வெளிப்படுத்த முடியாமல் என்னைத் தொழுதுகொண்டு நின்றான். அதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது - என்கிறாள் தலைவி.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.