மதுர

மதுர 2004 ஆம் ஆண்டு [1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரமணா மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ரக்சிதா, சோனியா அகர்வால், வடிவேல், பசுபதி, சீதா போன்ற பலர் நடித்துள்ளனர்.

மதுர
இயக்கம்ரமணா மாதேஷ்
தயாரிப்புரமணா மாதேஷ்
கதைரமணா மாதேஷ்
இசைவித்யா சாகர்
நடிப்புவிஜய்,
ரக்சிதா,
சோனியா அகர்வால்,
தேஜாசிறீ,
வடிவேல்,
பசுபதி,
சீதா
விநியோகம்மூவி மேஜிக்
வெளியீடுஆகஸ்ட் 7, 2004
ஓட்டம்165 நிமிடங்கள்.
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

கதைச் சுருக்கம்

சென்னையில் உள்ள காமாட்சியின் (சீதா) வீட்டுக்கு அவர் மகள் சுசிலாவின் (சோனியா அகர்வால்) நண்பர்கள் என்று மதுரவேல் (விஜய்) மற்றும் பாண்டு (வடிவேல்) சுசிலாவைக் காண வருகிறார்கள். அவர்களுக்கு இங்கு யாரையும் தெரியாது என்பதால் அவர்களை அங்கேயே தங்கச் சொல்கிறார் காமாட்சி. மதுரயும் பாண்டுவும் சந்தையில் காய்கறி கடை வைக்கிறார்கள். அனிதா (ரக்சிதா) அங்கு கல்லூரி திட்டப்பணிக்காக செய்தி சேகரிக்க வருகிறார். அவர் மதுரயை காதலி்க்கிறார். சுசிலாவின் இரு தங்கைகள் காமாட்சியுடன் வசித்து வருகிறார்கள், கடைசி தங்கைக்கு பேச்சு வராது. மதுரைவேல் அவர்களுக்கு மகனாக இருந்து உதவுகிறார். காமாட்சியின் இரண்டாவது மகள் ஒருவரை காதலிப்பதை அறிந்து அவரை சந்திக்க மதுர செல்கிறார். ஆனால் அவர் தான் மதுரயின் தங்கையை திருமணம் செய்யமுடியாது எனவும் தனக்கு இது போல் நிறைய பேருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார். அவரை மதுர அடித்து விடுகிறார். அதற்கு பழி வாங்க அவர் சில போக்கிரிகளையும் காவல்துறையினரையும் அனுப்புகிறார். மதுர அவர்களை அடித்து விரட்டிவிடுகிறார், காவல்துறை அலுவலர் இவரை கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்து எல்லோரையும் அங்கிருந்து போகச்சொல்கிறார். அப்போது காமாட்சிக்கு மதுர தான் தன் மகள் சுசிலாவை கொன்றவர் என்று அறிந்து மதுர வைத்திருந்த துப்பாக்கி கொண்டு அவரை சுட்டு விடுகிறார். மருத்துவமனையில் பாண்டு மதுர சுசிலாவை கொல்லவில்லை என்றும் மதுர இங்கு ஏன் வந்தார் என்றும் கூறுகிறார்.

மதுரைவேல் மதுரை மாவட்ட ஆட்சிதலைவராக இருந்தவர் அவரிடம் செயலாளராக சுசிலா பணிபுரிந்தார். மதுரையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் கே. டி. ஆர் (பசுபதி), கலப்பட பொருட்களை விற்று வந்தவர். கலப்பட பொருட்கள் உள்ள கிடங்குகளை மதுரைவேல் பிடித்தாலும் கே. டி. ஆர் மீது வழக்கு தொடுக்க சரியான ஆதாரம் கிடைக்காமல் இருக்கிறது. சரியான ஆதாரம் கிடைக்க வழியில்லாமல் மதுரைவேல் தடுமாறுகிறார். ஆதாரம் எடுக்க சுசிலா கே டி ஆர் வீட்டுக்கு செல்கிறார் ஆதாரத்தை கண்டு அதை மதுரைவேலுக்கு தொலைநகலி மூலம் அனுப்புகிறார் ஆனால் அவர் கேடிஆரிடம் மாட்டிக்கொள்கிறார், அவரை காப்பாற்ற மதுரைவேல் வருகிறார் ஆனால் அங்கு நடக்கும் சண்டையில் மதுரைவேல் வைத்திருந்த கத்தியால் சுசிலா வெட்டுப்படுகிறார். அவரை காப்பாற்ற மதுரைவேல் முயலும் போது அவர்கள் இருந்த வீட்டை கேடிஆர் ஆட்கள் எண்ணெய் ஊற்றி கொளுத்திவிடுகிறார்கள். அதில் சுசிலா உயிர் போகிறது, மதுரைவேல் காயங்களுடன் தப்பித்து பாண்டுவின் வீட்டை அடைகிறார். சுசிலாவை கொன்று விட்டு மதுரைவேல் தலைமறைவாகி விட்டதாக செய்திவெளியாகிறது. சிறிது காலம் தலைமறைவாக இருந்து தான் குற்றவாளியல்ல என்பதை நிருபிக்க வேண்டியும் சுசிலா குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியும் மதுரைவேல் சென்னைக்கு வருகிறார். தான் குற்றவாளி அல்ல என்பதற்கான ஆதாரங்களை சேகரித்து முதலமைச்சரிடம் கொடுக்க, முதலமைச்சர் அவரை மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கிறார். மதுரைவேல் கேடிஆரின் பிடியில் இருந்து மதுரையை மீட்டு கேடிஆரை கொல்கிறார்.

மேற்கோள்கள்

  1. 2004ல் வெளிவந்தது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.