மண ஒப்பந்தக் கோட்பாடு

மண ஒப்பந்தக் கோட்பாடு (Alliance Theory) அல்லது பரிமாற்றப் பொதுக் கோட்பாடு (General Theory of Exchanges) என்பது, உறவுமுறைத் தொடர்புகளை ஆய்வு செய்வதற்கான ஒரு அமைப்பு சார்ந்த வழிமுறையின் பெயராகும். குளோட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) என்பவர் எழுதிய உறவுமுறையின் தொடக்கநிலை அமைப்புக்கள் (Elementary Structures of Kinship) என்னும் நூலில் இருந்தே இது உருவானது. இது ராட்கிளிஃப் பிரவுன் (Radcliffe-Brown) என்பவருடைய செயற்பாட்டுக் கோட்பாட்டுக்கு (functionalist theory) எதிரானது. மண ஒப்பந்தக் கோட்பாடு, 1980கள் வரையில், பிரான்ஸ் நாட்டின் மானிடவியல் ஆக்கங்களை வழிப்படுத்தியது எனலாம். அத்துடன் இதன் செல்வாக்கு, உளப்பகுப்பாய்வு, தத்துவவியல், அரசியற் தத்துவம் எனப் பல துறைகளிலும் பரவலாக உணரப்பட்டது.

குளோட் லெவி-ஸ்ட்ராஸின் மண ஒப்பந்தக் கோட்பாடு, ஐரோப்பியர் அல்லாத சமுதாயங்களில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது. மேற்படி ஆய்வில், இரத்தஉறவுகளுக்கும், மண உறவுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை குளோட் கவனித்தார். சில சமயங்களில் ஒன்றுக்கொன்று எதிராகவும் வேறு சமயங்களில் ஒன்றுக்கொன்று மிகைநிரப்பிகளாகவும் (complementary) செயல்படும் இவை சமுதாயங்களை மணமுறை அடைப்படையில் வகைப்படுத்துவதற்கு வழி சமைத்தன. மண ஒப்பந்த (marriage-alliance) எடுகோள் இந்த அடிப்படையிலேயே உருவானது. இது குடும்பங்கள், கால்வழிகள் முதலானவை ஒன்றிலொன்று தங்கியிருத்தலை எடுத்துக்காட்டியது. மணவிழாக்களும், ஒருவகையான தொடர்பு முறை வடிவமாகவே நோக்கப்பட்டது. லெவி-ஸ்ட்ராஸ், லூயிஸ் டுமொண்ட், ரொட்னி நீடாம் போன்ற மானிடவியலாளர்கள், இது தொடர்பான விளக்கங்களைத் தந்துள்ளனர். ஆகவே, மண ஒப்பந்தக் கோட்பாடு, தனிப்பட்டவர்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாண அல்லது சமூகம் எதனால் ஆக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முயல்கிறது எனலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.