மகாஜன எக்சத் பெரமுன

மகாஜன எக்சத் பெரமுன (Mahajana Eksath Peramuna (MEP), மக்கள் ஐக்கிய முன்னணி) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தற்போதைய தலைவராக தினேஷ் குணவர்தனா உள்ளார்.

மக்கள் ஐக்கிய முன்னணி
People's United Front
மகாஜன எக்சத் பெரமுன
தலைவர்தினேஷ் குணவர்தனா
நிறுவனர்பிலிப் குணவர்தனா, வில்லியம் சில்வா
செயலாளர்டி. எம். கருணாதிலக திசாநாயக்கா
தொடக்கம்1959
தலைமையகம்10/4 லேக் வீதி, மகரகமை
தேசியக் கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இலங்கை நாடாளுமன்றம்
3 / 225
தேர்தல் சின்னம்
வண்டிச்சக்கரம்

மகாஜன எக்சத் பெரமுன தினேஷ் குணவர்தனாவின் தந்தை பிலிப் குணவர்தனா, மற்றும் வில்லியம் சில்வா ஆகியோரால் 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதே பெயரில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் 1956 தேர்தலுக்காக அமைக்கப்பட்ட மகாஜன எக்சத் பெரமுன என்ற கூட்டணி 1959 இல் கலைக்கப்பட்டதை அடுத்து அதே பெயரில் பிலிப் குணவர்தனா புதிய கட்சியை ஆரம்பித்தார். மார்ச் 1960 இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இக்கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. 1960களில் இக்கட்சி லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கியது.[1]

1983 இல் தினேஷ் குணவர்தனா மகரகமை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1989 இல் புதிய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா ஆகியோர் கொழும்பு மாவட்டத்திலும், கீதாஞ்சன குணவர்தன தேசியப் பட்டியலிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதில் 3 இடங்கள் கிடைத்தன. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா, சோமவீர சந்திரசிரி (தேசியப் பட்டியல்) ஆகியோரே வெற்றி பெற்றனர். 2004 தேர்தலில் தினேஷ் குணவர்தனா, கீதாஞ்சன குணவர்தன (தேசியப் பட்டியல்) ஆகியோருக்கு இடம் கிடைத்தது. 2010 தேர்தலில், தினேஷ் குணவர்தனா, சிறியானி விஜேவிக்கிரம (அம்பாறை), கீதாஞ்சன குணவர்தன (தேசியப் பட்டியல்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேற்கோள்கள்

  1. Chapter 19: Anguish and pain Asia Times Online - December 15, 2001
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.