மகாகாலன்

மகாகாலன் வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு தர்மபாலர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் தைக்கோகுதென் என அழைப்பர். இவரது துணை ஸ்ரீதேவி ஆவார்.

சொற்பொருளாக்கம்

வடமொழியில் மகாகாலன்(महाकाल) என்பதை மஹா + கால என பிரிக்கலாம். இதற்கு மஹா என்றால் சிறந்த, உயரிய என பொருள் கொள்ளலாம். கால(काल) என்றால் கருமை என்று பொருள். திபெத்திய மொழியில் இவரை கோன்போ பியாக் என அழைக்கப்படுகிறார்.

விவரங்கள்

திபெத்திய பௌத்தத்தின் அனைத்துப் பிரிவினரும் மகாகாலனை வணங்குகின்றனர். மேலும் அவர் பலவிதமான தோற்றங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஒவ்வொரு தோற்றத்திலும் அவர் (அவலோகிதேஷ்வரர், சக்ரசம்வரர் முதலியவர்களின் அவதாரமாகக் கருதப்படுகிறார். மேலும் ஒவ்வொரு தோற்றங்களிலும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை.

மகாகாலனின் நிறம் கருப்பு. எப்படி அனைத்து நிறங்களும் ஒன்றினால் கருமை கிடைக்கின்றதோ அதே போல் அனைத்து குணங்களும் தோற்றங்களும் பெயர்களும் மகாகாலனுடன் ஒன்றிவிடுவதாக நம்பப்படுகிறது. மேலும் கருமை என்பது நிறமற்ற நிலையை குறிப்பதினால் மகாகாலனும் குணமற்றவராகக் கருதப்படுகிறார். இதை வடமொழியில் நிர்குணம் அதாவது குணமற்ற என குறிப்பிடுவர்.

மேலும் மகாகாலன் எப்போதும் ஐந்து மண்டை ஓடுகளைக் கொண்ட மகுடத்தை அணிந்தவராகக் காட்சியளிக்கிறார். இந்த ஐந்து மண்டை ஓடுகளும் ஐந்து வழுக்களையும்(கிலேசம்) ஐந்து விவேகங்களாக உருமாற்றுவதைக் குறிக்கிறது.

மகாகாலனின் தோற்றங்களில் பல்வேறு விதமான வேறுபாடுகளைக் காணலாம்

தோற்றங்கள்

ஆறு கரங்களுடைய மகாகாலன்

ஆறு கரங்களுடைய மகாகாலன்(வடமொழி:ஷட்-புஜ மஹாகால षड्-भुज महाकाल) திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பிரிவினரால் பெரிதும் போற்றப்படுகிறார். இவருடைய இந்த தோற்றம் கருணையின் போதிசத்துவரான அவலோகிதேஷ்வரரின் உக்கிரமான மற்றும் ஆற்றல்வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறார்.

அவருக்கு பின்வரும் குணங்கள் காணப்படுகின்றன:

  • அவருடைய ஆறு கரங்களும் ஆறு பாரமிதங்களை(முழுமைகளை) நிறைவை குறிக்கின்றனர். இந்த ஆறு பாரமிதங்களும் போதிசத்துவர்களால் அடைய வேண்டியவை ஆகும்
  • அவருடைய கைகளில் பல்வேறு உபகரணங்களும் ஆயுதங்களும் காணப்படுகின்றன.

இந்த மகாகாலனுக்கு வெள்ளை நிறத்தோற்றமும் உண்டு. இதை வடமொழியில் ஷட்-புஜ சீத மஹாகாலன்(षड्-भुज सीत महाकाल) என அழைக்கப்படுகின்றார். இவர் மங்கோலியாலுள்ள கெலுக் பிரிவினரால் வணங்கப்படுகின்றார். எனினும் இவர் இப்பிரிவினரால் செல்வத்தின் அதிதேவதையாக வணங்கப்படுகின்றார். எனவே அவரது சித்தரிப்பிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவருடைய பிச்சை பாத்திரத்தில் பல்வேறு செல்வங்கள் காணப்படுகின்றன. மேலும் கபால மகுடத்திற்கு பதிலாக ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்தவராக காட்சியளிக்கிறார்.

நான்கு கரங்களுடைய மகாகாலன்

நான்கு கைகள் கொண்ட மகாகாலர்கள் திபெத்தின் கக்யு பிரிவினரின் பாதுவாலர்களாக கருதப்படுகின்றனர். மேலும் நால்கரங்களுடைய மகாகாலன் மகாசந்தி உபதேசங்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவருடைய நான்கு கரங்களும் நான்கு நற்செயல்களை புரிவதாக நம்பப்படுகிறது. இந்த செயல்களே அவரை வழிபடுபவர்களுக்கு தரும் வரங்களாக கருதப்படுகிறது.


  • தொல்லைகள், தடைகள் மற்றும் நோயகளை நீக்குதல்
  • அறிவு, நற்குணங்கள் மற்றும் ஆயுளை அதிகப்படுத்துதல்
  • தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி அவர்களை தர்மத்தினை பின்பற்றச்செய்தல்
  • குழப்பம், ஐயம் மற்றும் அறியாமையை அழித்தல்

இரு கரங்களுடைய மகாகாலன்

இவர் திபெத்திய கர்ம கக்யு பிரிவினரின் பாதுககாவலராக கருதப்படுகிறார். அதிலும் முக்கியமா கர்மபாக்களை காப்பாற்றுபவராக கருதப்படுகிறார். பஞ்சரநாத மகாகாலன் என அழைக்கப்படும் இவர் மஞ்சுஸ்ரீயின் அவதாரமாக கருதப்படுகிறார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.