மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம் மெய்யெழுத்துக்களில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துக்களையும் அடுத்துவரும் மகர ஒற்றும் (ம்), மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு

போன்ம்
காண்ம்
வரும்வண்ணக்கன் [1]

மகரக் குறுக்க ஒலிக்குரிய மாத்திரை அளவு கால்.

இலக்கண நூல் விளக்கம்

ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் என்னும் நன்னூல் நூற்பாவுக்கு உரையாசிரியர்கள்

வரும் வண்டி
தரும் வளவன்

என்னும் எடுத்துக்காட்டுகின்றர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும். இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும் [2] என்பது தொல்காப்பியம். இதன்படி பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையிலும் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

எடுத்துக்காட்டு

செய்யுளின் இடையில் 'போன்ம்'வென்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என [3]
செய்யுள் இறுதியில் 'போலும்'முயக்கமும், தண்டாக் காதலும் தலைநாள் போன்மே [4]

உசாத்துணை

  • மாணிக்கவாசகன், ஞா. (மார்ச்சு 2006). தொல்காப்பியம் - மூலமும் விளக்க உரையும். சென்னை: உமா பதிப்பகம். பக். 31-32.

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. இதனை இருசொல்-புணர்ச்சி என அறிஞர்கள் விலக்குவர்.
  2. தொல்காப்பியம் 1-51
  3. பதிற்றுப்பத்து 51
  4. அகநானூறு 332
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.