மகன்

மகன் (son) என்ற சொல் ஆண்பால் மகவினைக் குறிக்கும் உறவுமுறைப் பெயர். அதாவது, ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளை அவர்களுடைய மகன் எனப்படுவான்..[1] இதற்கிணையான பெண்பால் மகவு மகள் எனப்படுகிறாள். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் ஆண், ஆடவர் மற்றும் ஆண்பாற் பண்புகளையும் குறிக்கும். பிள்ளை, பையன் என்ற சொற்களும் பாவிக்கப்படுகின்றன.

சியாம் மன்னர் ஐந்தாம் இராமா (வலப்பக்கம் நிற்பவர்) அவரது 33 மகன்களில் சிலருடன், 1897.

தமிழில் மகன் உறவுமுறை

ஒரு குறித்த தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறையில் உள்ள எல்லா ஆண் பிள்ளைகளையும், தமிழில், மகன் என்ற உறவுமுறைச் சொல் குறிக்க வல்லது. ஒருவருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளையை மட்டுமன்றி, அவருடைய ஒத்த பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் ஒத்த பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு மகன் முறை என்பது தமிழர் வழக்கம். அவ்வாறான ஆண் பிள்ளை குறித்த நபரின் பெறா மகன் எனப்படுவான். இவ்வாறே ஒருவருடைய எதிர்ப் பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் எதிர்ப் பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு "மருமகன்" உறவுமுறை ஆவான். பெறா மகன் என்பது பெறாமல் மகன் உறவுமுறை கொண்டவன் என்னும் பொருளைத் தருகிறது. மருமகன் என்பது மருவு. மகன் என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானதாக இருக்கலாம்.[2]

குறிப்புகள்

  1. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் மகன் என்னும் சொல்லுக்கான பதிவு
  2. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் மருகன் என்னும் சொல்லுக்கான பதிவு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.