ம. வே. திருஞானசம்பந்தம்

ம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளை (1885 - 1955) யாழ்ப்பாணம் மட்டுவிலைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். கோபால நேசரத்தினம் என்னும் சமூக புதினத்தை எழுதியவர்.

ம. வே. திருஞானசம்பந்தம்
பிறப்பு1885
மேலைப் புலோலி, யாழ்ப்பாண மாவட்டம்
இறப்பு1955 (அகவை 6970)
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஎழுத்தாளர், பத்திரிகையாளர், ஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்ம. க. வேற்பிள்ளை

வாழ்க்கைக் குறிப்பு

திருஞானசம்பந்தபிள்ளை மேலைப் புலோலியைச் சேர்ந்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் புதல்வர். சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனாரின் மருகர். சட்டத்தரணி வே.மாணிக்கவாசகர், கவிஞர் ம. வே. மகாலிங்கசிவம் ஆகியோரின் சகோதரர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ஆரம்ப கால ஆசிரியர். யாழ் இந்துக் கல்லூரியில் 1912ஆம் ஆண்டு தொடக்கம் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, தமிழும் சைவமும் அங்கு கற்பித்தார். இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து "உலகம் பலவிதம்" என்ற நெடுந்தொடரை எழுதினார். மாணவர் பாட நூல்களாக அவர்களுடைய தரத்திற்கேற்றவகையில் பாடங்களைத் தொகுத்து "பாலபாடங்கள்" என்ற தலைப்பில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். அரிச்சந்திர புராணம், மயானகாண்டம், நளவெண்பா, கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என உரையெழுதியமை இவரது பணியில் குறிப்பிடக்கூடிய சிலவாகும்.

நாடக ஈடுபாடு

சரஸ்வதி விலாச சபை (1914) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பெற்ற நாடக சபையில் நடிகராகவும், நாடகாசிரியராகவும் விளங்கினார்.

புதின ஆசிரியர்

தமிழை மரபு முறை நின்று கற்றவர். அவர் எழுதிய மாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் அவரின் பாண்டித்தியத்திற்கு எடுத்துக்காட்டு. மூன்று நாவல்களை எழுதி வெளியிட்டார். இவற்றில் கோபால நேசரத்தினம் (1927) அக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பேசப்பட்ட நாவலாகும். "யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்கத்தையும், பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த மக்களையும் அவர்களின் வாழ்வியல்களையும் கூர்ந்து நோக்கி அவற்றைச் சுவைபடக் கதை வடிவில் அமைத்திருந்தார். கிறிஸ்தவ சமயப் பின்னணியிலே சன்மார்க்கச் சீவியத்தை வலியுறுத்தும் வகையில் இவரின் நாவல் அமைந்திருந்தது." [1]

வெளிவந்த நூல்கள்

  • மாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்
  • காசிநாதன் நேசமலர் (நாவல், 1924)
  • துரைரத்தினம் நேசமணி (நாவல், 1927)
  • கோபால நேசரத்தினம் (நாவல், இது 1921இல் எழுதப்பட்டு 1927இல் வெளிவந்தது. 1948இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது)
  • ஓம் நான் சொல்லுகிறேன் (குறுநாவல், இக்கதை அறுபதுகளில் தமிழ் மலர் 10ம் தரப் பாட நூலில் வெளியானது)

குறிப்புகள்

  1. சொக்கன், உலகம் பலவிதக் கதைகளின் வரிசையில் கோபால நேசரத்தினம் - ஓர் அறிமுகம், மல்லிகை, ஜனவரி 2005

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.