சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். தித்தன் என்னும் மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு நாடாண்டபோது போர்வை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்தவன்.

தித்தன் மகள் ஐயை. தித்தன் இவளை இந்தக் கிள்ளிக்கு மணம் செய்து தர ஒப்பவில்லை எனத் தெரிகிறது. இந்தக் கிள்ளி ஆமூர் மல்லன் என்பனோடு மற்போர் புரிந்து வென்றதைத் தித்தன் காணவும் மறுத்திருக்கிறான். ‘பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். மாநாய்கன் மகள் சிலப்பதிகாரக் காலக் கண்ணகி. உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக விளங்கியவன் ‘பெருங்கோழி நாய்கன்’. இவன் மகள் நக்கண்ணையார். சாத்தன் என்னும் சொல் நில வணிகனைக் குறிக்கும். மாசாத்துவான் மகன் சிலப்பதிகாரக் கோவலன். உறையூரில் வாழ்ந்த சாத்தனின் தந்தை ‘சாத்தந்தையார்’. இந்தச் சாத்தந்தையாரும், நக்கண்ணையாரும் இந்தக் கிள்ளியைப் பாடியுள்ளனர்.

  1. இந்தக் கிள்ளி ஒருகாலை மண்டியிட்டுக்கொண்டு ஆமூர் மல்லனோடு போரிடுவதைத் தித்தன் காணவேண்டும்.[1]
  2. கிள்ளியின் போர்யானைக்கு இன்று பலியாகப்போகும் அளியர் (இரங்கத்தக்கவர்) யார் யாரோ! [2]
  3. போர் நடந்த இடம் போர்வை. ஊரில் திருவிழா. மனைவிக்கு மகப்பேறு. மழை பொழிகிறது. இந்தக் கால நெருக்கடியில் மனைவிக்குக் கட்டில் பின்னுபவன் கை போல, கிள்ளியின் கைகள் விரைந்து சுழன்று போரிட்டன. [3]
  • பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், கிள்ளி, ஆமூர் மல்லன் ஊருக்கே துரத்திச் சென்று போரிட்டதைப் பாடுகிறார்.
  1. இந்தப் பெண்புலவரின் காதலன் இந்தக் கிள்ளி. இவன் பிரிவை எண்ணியதால் இவளது வளையல்கள் கழன்றன.[4]
  2. உமணர் ஆற்றுத்துறையைக் கடக்க நேரும்போது அஞ்சுவது போல, பகைவர் கிள்ளியோடு போரிட அஞ்சுவர்.[5]
  3. என் கிள்ளிக்கு நாடு இது அன்று. ஊர் இது அன்று. எனவே அங்குள்ள மக்களில் சிலர் கிள்ளி பெற்றது வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி அன்று என்கின்றனர். ஆனால் எனக்குத் தெரியும், கிள்ளி வெற்றி பெற்றான் என்று.[6]

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 80
  2. புறநானூறு 81
  3. புறநானூறு 82 பாடல் ஆமூர் மல்லனை “”ஊர் கொள வந்த பொருநன்” எனக் குறிப்பிடுகிறது.
  4. புறநானூறு 83
  5. புறநானூறு 84
  6. புறநானூறு 85
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.