போரோசிலிக்கேட் கண்ணாடி

போரோசிலிக்கேட் கண்ணாடி என்பது சிலிக்கா, போரான் ஒட்சைட்டு ஆகியவற்றை முதன்மைக் கண்ணாடி உருவாக்கச் சேர்பொருளாகக் கொண்டுள்ள ஒருவகைக் கண்ணாடி ஆகும். போரோசிலிக்கேட் கண்ணாடிகள் மிகக் குறைந்த வெப்ப விரிவுக் குணகம் கொண்டது. இதனால் பிற கண்ணாடி வகைகளை விடக் கூடுதலான வெப்ப அதிர்ச்சியைத் தாங்கும் தன்மை இதற்கு உண்டு. இவ்வகைக் கண்ணாடிகள் குறைவான வெப்பத் தகைப்புக்களுக்கு உட்படுபவை.

போரோசிலிக்கேட் கண்ணாடிப் பொருட்கள். ஒரு சோதனைக்குளாயும், இரண்டு முகவைகளும்).

வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் செருமன் கண்ணாடி உற்பத்தியாளரான ஒட்டோ இசுக்காட் (Otto Schott) என்பவர் முதன் முதலில் போரோசிலிக்கேட் கண்ணாடியை உருவாக்கினார். 1893 ஆம் ஆண்டில் இக்கண்ணாடி ""துரான்" என்னும் வணிகப் பெயரில் விற்பனை செய்யப்பட்டது. 1915 ஆம் ஆண்டில் "கோர்னிங் கிளாஸ் வேர்க்ஸ்" என்னும் நிறுவனம் இவ்வகைக் கண்ணாடியை "பைரெக்சு" என்னும் வணிகப்பெயரில் அறிமுகப்படுத்திய பின்னர், ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்பெயர் போரோசிலிக்கேட் கண்ணாடிக்கான இன்னொரு பெயராக நிலைத்து விட்டது. ஐரோப்பாவின் பைரெக்சு உற்பத்தியாளர்களான "ஆர்க் இன்டர்நசனல்" தமது சமையலறைப் பொருட்களின் உற்பத்தியில் போரோசிலிக்கேட் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பைரெக்சின் ஐக்கிய அமெரிக்க உற்பத்தியாளர் தமது சமையலறைப் பொருட்களை செம்பதச் சோடாச் சுண்ணக் கண்ணாடியைப் பயன்படுத்திச் செய்கின்றனர். இதனால் சமையலறைப் பாத்திரங்கள் தொடர்பில் பைரெக்சு என்பது போரோசிலிக்கேட் கண்ணாடியை மட்டும் குறிக்காது. ஆய்வுகூடக் கண்ணாடிப் பொருட்களைப் பொறுத்தவரை, பைரெக்சு, போமெக்சு, துரான், கிமாக்சு போன்ற பெயர்கள் எல்லாமே போரோசிலிக்கேட் கண்ணாடியைக் குறிக்கின்றன.


பெரும்பாலான போரோசிலிக்கேட் கண்ணாடிகள் நிறமற்றவை. 1986 ஆம் ஆண்டில் பால் டிரௌட்மன் என்பவர் தனது "நோர்த்ஸ்ட்டார் கிளாஸ்வேர்க்ஸ்" என்னும் கண்ணாடித் தொழிலகத்தைத் தொடங்கியபோது போரோசிலிக்கேட் நிறக் கண்ணாடிகளும் அறிமுகமாயின.


கண்ணாடித் தராரிப்பில் வழமையாகப் பயன்படும் குவாட்சு, சோடியம் காபனேட்டு, கல்சியம் காபனேட்டு போன்றவற்றுடன், போரானும் போரோசிலிக்கேட் கண்ணாடி உற்பத்தியில் பயன்படுகிறது. பொதுவாக இவ்வகைக் கண்ணாடியில், 70% சிலிக்கா, 10% போரான் ஒட்சைட்டு, 8% சோடியம் ஒட்சைட்டு, 8% பொட்டாசியம் ஒட்சைட்டு, 1% கல்சியம் ஒட்சைட்டு என்பன உள்ளன. பொதுவான கண்ணாடிகளைவிட போரோசிலிக்கேட் கண்ணாடிகளைச் செய்வது கடினமானது. ஆனாலும், இதன் சிறப்பான நீடித்து உழைக்கும் தன்மை, வேதிப்பொருட்களால் தாக்கப்படாமை, கூடிய வெப்பம் தாங்கும் தன்மை என்பன இவ்வகைக் கண்ணாடிகள் ஆய்வுகூடப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், மின் விளக்குகள், தீத்தடுப்புக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பெரிதும் பயன்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.