போடோன்சார் முன்ஹாக்

போடோன்சார் முன்ஹாக் (அநேகமாக கி.பி. 850 - கி.பி. 900) என்பவர் ஒரு புகழ்பெற்ற மங்கோலியப் போர்த்தலைவர் ஆவார். இவர் செங்கிஸ் கான் மற்றும் பருலாஸ் மங்கோலியர்களின் மூதாதையர் ஆவார். இந்த பருலாஸ் இனத்தில் தான் தைமூரும் தோன்றினார். ஆகையால் இவர் இந்தியாவை ஆண்ட முகலாயர்களுக்கும் மூதாதையர் ஆவார். 

1430 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாரசீக ஓவியத்தில் போடோன்சார் (நீல நிறத்தில்) தனது தாய் ஆலன் குவாவிடம் கேட்பதாக காட்டப்பட்டுள்ளது.

மங்கோலியர்களின் இரகசிய வரலாறின்படி இவர் போர்த் சினோவின் 12ம் தலைமுறை பெயரளவு வழித்தோன்றல் ஆவார். செங்கிஸ் கான் போடோன்சார் முன்ஹாக்கின் 9ம் தலைமுறை நேரடி வழித்தோன்றல் ஆவார். சில சமயம் இவர் எளிமையான புடோன்சர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரே போர்சிசின் குடும்பத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். சகதை மொழிப் பாரம்பரியம் இவரை கி.பி. 747ல் அபு முஸ்லிம் புரட்சியின்போது வாழ்ந்தவராகக் குறிப்பிடுகிறது.[1] போர்சிசின் என்ற பெயர் இவரிடமிருந்து தோன்றவில்லை. இவரது பெயரளவு கொள்ளுப்பாட்டனார் போர்ஜிகிடை மெர்கெனிடம் (விவேக போர்ஜிகிடை) இருந்து தோன்றியது ஆகும். கி.பி. 747ம் ஆண்டு என்பது போர்ஜிகிடை மெர்கெனுடன் சரியாகப் பொருந்துகிறது. இவர் கி.பி. 747ல் வாழ்ந்த பயன்சுர் கானுடன் குழப்பிக் கொள்ளப்படுவதாலும் இந்த ஆண்டுக் கணக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. போடோன்சார் முன்ஹாக்கின் பொருள் "சிறிய நெறி தவறிப் பிறந்த மூடன்" என்பதாகும். புடுன்சார் என்பது "புடுச்சி" (நெறி தவறிப் பிறந்தவன்), "-ன்சார்" என்ற விகுதி மற்றும் முட்டாள் அல்லது மூடன் என்ற பொருளுடைய "முன்ஹாக்" என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ஆனால் இவரது பெயர் மங்கோலியப் பழங்குடியினரிடையே இவர் வகிக்கும் உயர்ந்த நிலைக்கு அப்படியே முரண்பாடாக உள்ளது. 

உசாத்துணை

  1. Munis, M.R.M.Agahi, Firdaws al-iqbal, p.15
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.