பொருளியல் பின்னடைவு

பொருளியல் பின்னடைவு (economic recession) என்பது, தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாவது, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடைதல் என விளக்கப்படுகின்றது. பொதுவாக இதனைக் குறைவான பொருளியல் செயற்பாடுகளைக் கொண்ட காலப்பகுதி எனலாம். இது வணிகச்சுழல் சுருங்குவதைக் குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பொருளியல் ஆய்வு நிலையம், பொருளியல் பின்னடைவு என்பது, "பல மாதங்களுக்கு நீடிப்பதும்; பொதுவாக உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, உண்மையான தனியாள் வருமானம், வேலைவாய்ப்பு, தொழிற்றுறை உற்பத்தி, மொத்த-சில்லறை வணிகம் போன்றவற்றில் தாக்கம் கொண்டுள்ளதும்; பொருளாதாரம் முழுதும் பரவிக் காணப்படுவதுமான குறிப்பிடத்தக்க பொருளியல் செயற்பாட்டு வீழ்ச்சி" என வரைவிலக்கணம் கூறுகிறது.

பொருளியல் பின்னடைவு, ஒரே நேரத்தில் காணப்படக்கூடிய பல இயல்புகளைக் கொண்டது. வேலைவாய்ப்பு, முதலீடு, நிறுவன இலாபம் என்பன குறைதல் இவ்வியல்புகளுள் அடங்கும். கடுமையான அல்லது நீடித்துச் செல்லும் பின்னடைவு, பொருளியல் தாழ்நிலை (economic depression) எனப்படும்.

பொருளியல் பின்னடைவுக்கான முற்குறிகள்

பின்னடைவு வரப்போவதை அறிந்து கொள்வதற்கான முழுமையாக நம்பத் தகுந்த முற்குறிகள் (predictors) எதுவும் கிடையா. பின்வருவன ஓரளவு நம்பக்கூடிய முற்குறிகளாகும்.

  • ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலும் பொருளியல் பின்னடைவு ஏற்படுவதற்கு முன்னர் பங்குகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் 1946 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10% அல்லது அதற்கும் அதிகமாகப் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்த அரைவாசியளவு சந்தர்ப்பங்களில் பொருளியல் பின்னடைவு ஏற்படவில்லை. பொருளியல் பின்னடைவு ஏற்பட்ட ஏறத்தாழ 50% சந்தர்ப்பங்களில் பின்னடைவு ஏற்பட்ட பின்னரே பங்கு விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
  • பொருளியலாளரான ஜொனதன் எச். ரைட் என்பவர், தலைகீழ் ஈட்ட வளையி (Inverted yield curve) என்னும் மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளார். 100 ஆண்டு மற்றும் மூன்றுமாத திறைசேரிக் கடன் ஆவணங்களின் ஈட்டம், ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசுக் காப்பு முறைமையின் நாளுக்கான நிதிய விலை என்பவற்றை இம் மாதிரி பயன்படுத்துகின்றது.
  • வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் ஏற்படும் மூன்று மாதங்களுக்கான மாற்றம்.
  • முதன்மைக் குறியீட்டுச் சுட்டெண்

பொருளியல் பின்னடைவைக் கையாளல்

ஒரு பொருளாதாரத்தைப் பின்னடைவில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான வழிமுறைகள், கொள்கை வகுப்பாளர்களின் பொருளாதாரக் கொள்கையில் தங்கியுள்ளது. கெயின்சியப் பொருளியலாளர்கள், பொருளியல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு அரசு பற்றாக்குறைச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறும் அதேவேளை, வழங்கல் முறைப் பொருளியலாளர், வணிக முதலீட்டை ஊக்குவிப்பதற்கு வரிகளைக் குறைக்க வேண்டும் என்பர். தலையிடாமைக் கொள்கையை வலியுறுத்தும் பொருளியலாளர்கள் இயல்பான சந்தைக் காரணிகளின் செயற்பாட்டில் அரசு தலையிடக்கூடாது என்று கருதுவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.