பொத்துவில் மண்மலை
பொத்துவில் மண்மலை என்பது இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பாகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. ஆமரபுட்டி மற்றும் சான்ட் ஹில் (Sandhill) என்ற பெயர்கள் கொண்டும் இந்த இயற்கையாக உருவான பிரமாண்டம் அழைக்கப்படுவதுண்டு.

அமைவிடம்
மண்மலையின் தெற்காக ஜலால்தீன் சதுக்க பிரதேசமும், கிழக்காக கடற்கரையும், மேற்காக மதுரஞ்சேனை பிரதேசமும், வடக்காக சின்னப்புதுக்குடியிருப்பு பிரதேசமும். எல்லைகளாக அமைந்து காணப்படுகின்றன. [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்|இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின்]] காரணமாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, மண்மலையானது ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது குறிப்பிடத்தகது.
அமைப்பு
மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்து, சுமார் 32 அடி உயரத்தையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த தென்னைகள் அடக்கமாய் வீற்றிருக்கும் அறுகம் களப்பு என பல இயற்கையின் அழகுககள் உள்ளன. மண் சேர்ந்து மலையானது மட்டுமல்லாது, அதனிடையிடையே பச்சைப் பசேலென வளர்ந்து விரிந்த பாரிய மரங்கள் பார்வைக்கு பக்குவமாய் உள்ளன. முழு நிலவில் பலரும் இங்கு தங்கள் பொழுதை இனிதாகக் களித்துவிட கூடிடுவார்கள்.
வரலாறு
மண்மலை எப்போது, எவ்வாறு உருவாகியது? என்பதற்கான தெளிவான பதில்களோ, விளக்கங்களோ கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் பண்டைய காலத்தில் ஆழிப்பேரலை போன்ற ஓர் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதே மண்மலை உருவாகி இருக்கக்கூடும் என வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் சொல்கிறார்கள்.
ஆயினும் பொத்துவில் அறுகம் குடா, மிகவும் முக்கியமான துறைமுகமாகக் பண்டைக் காலத்தில் திகழ்ந்ததாகவும் அறுகம் குடா என்பது லித்தஸ் மெக்னஸ் (Lithus Magnus) எனும் பெயரில் வழங்கப்பட்டதாகவும் கி.பி 140 காலப்பகுதியில் தொலமியினால் வரையப்பட்ட வரைபடமும் குறிப்புகளும் குறிப்பிடுகின்றன [1]. அறுகம் குடா சிறந்த துறைமுகமாக திகழ்வதற்கு அவ்விடத்தில் அமைந்திருந்த மண்மலை பெரிதும் உதவியாகவிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஒரு தளமாகவும் மண்மலை காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
உசாத்துணைகள்
- அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
தொடர்புடையவை
வெளி இணைப்பு
- மண்மலை என்னும் அதிசயம் - (தமிழில்)