பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை நற்றிணை 375, 387. இவரது தந்தையார் பொதும்பில் கிழார் என்பவரும் ஒரு புலவர்.

பாடல் சொல்லும் செய்திகள்

குருகின் தோடு
குருகுப் பறவையின் கூட்டம் தாம் அமர்ந்திருந்த புன்னை மரத்து மலர்கள் உதிரும்படி ஒருசேர எழுந்து பறக்கும் சேர்ப்புநிலத் தலைவ! நான் நாணம் கொள்ளும்படியும், நன்னுதல் தலைவி உவக்கும்படியும் திருமணச் செய்தியோடு வந்தால் நல்லது. மண்டிலம் (சூரியன்) போய்விட்டது என்று கடலலை பொங்கிப் பாயும் எங்கள் ஊருக்கு வந்தால் நல்லது. - எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.[1]
ஆலங்கானத்துச் செழியன் பாசறை
மழவரின் செந்தொடை அம்பு பாயும் கவலை (வழியில்) அவர் சென்றிருக்கிறார். சுருண்ட கூந்தலும், அது விழும் தோளும் கொண்ட உன் தொன்னலம் சிதையவிடாதே. தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாசறை அமைத்து நெடுஞ்செழியன் போரிட்டான். அந்தப் போர்க்களத்தில் வாள் மின்னியது போல வானம் மின்னி நெடும்பெருங்குன்றத்தில் குழுமி மழை பொழிய வருவதைப் பார். கார்காலம் வந்ததும் அவர் வந்துவிடுவார். - தோழி இவ்வாறு சொல்லித் தலைவியைத் தேற்றுகிறாள்.[2]
அடிக்குறிப்பு
  1. நற்றிணை 375
  2. நற்றிணை 387
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.