பொட்டனி விரிகுடா

பொட்டனி விரிகுடா (Botany Bay) என்பது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு விரிகுடா ஆகும். இது சிட்னி மையப்பகுதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சிட்னி விமான நிலையத்தின் இரு ஓடுபாதிகள் இந்த விரிகுடா வரை சென்று முடிகின்றன.

பொட்டனி விரிகுடாவைக் காட்டும் சிட்னியின் படம்
சிட்னியின் நாசா செய்மதிப்படம். வலாதுபக்கக் கீழ்ப்பகுதியில் பொட்டனி விரிகுடா காணப்படுகிறது.

பிரித்தானிய மாலுமியான ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியா கண்டத்தில் இந்த பொட்டனி விரிகுடாவிலேயே முதன் முதலில் வந்திறங்கினான்.

ஜேம்ஸ் குக் பயணம்

பொட்டனி விரிகுடாவில் அமைந்துள்ள நூற்றாண்டு நினைவுச் சின்னம்

ஜேம்ஸ் குக் இங்கு தரையிறங்கியது ஐக்கிய இராச்சியத்தின் ஆஸ்திரேலியாவின் மீதான ஆட்சியின் ஆரம்பமாகும். இது பின்னர் தெற்கு கண்டத்தில் தமது குடியேற்றத்திட்டத்தை ஆரம்பிக்கவும் வழி கோலியது[1].

இங்கு பெருந்திருக்கை (ஸ்டிங்கிறே, stingray) எனப்படும் நீர்வாழ் இனங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் ஜேம்ஸ் குக் இதற்கு முதலில் ஸ்டின்கிறே விரிகுடா எனப் பெயரிட்டார்[2]. பின்னர் இங்கு பல தாவர இனங்களைக் கண்டமையால் பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார்.

முதல் கப்பல் தொகுதி வருகை

பொட்டனி விரிகுடாவுக்கு விரைவில் நாடுகடத்தப்படவிருக்கும் தமது அன்புக்குரியவர்களுக்காக வேதனைப்படும் உறவினர்கள், 1792

கப்டன் ஆர்தர் பிலிப் தலைமையில் ஜனவரி 18, 1788 இல் முதன் முதலாக குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் தொகுதி ஒன்று இங்கு வந்திறங்கியது. இங்குள்ள மண் குடியேற்றத்துக்கு ஏற்றதாக இல்லாமையால் பிலிப் இங்கிருந்து மேலும் வடக்கே சென்று ஜாக்சன் துறை என்ற இயற்கைத் துறைமுகத்திற்குச் சென்று தனது முதலாவது குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

19ம் நூற்றாண்டில் இங்கு நன்னீர் பெரிதும் கிடைக்க ஆரம்பித்ததில் குடியேற்றம் இங்கு மீண்டும் ஆரம்பித்தது.

சிட்னி விமானநிலையமும் பொட்டனி துறையும்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையம் சிட்னி விமான நிலையம் பொட்டனி விரிகுடாவில் அதன் வடமேற்கே அமைந்துள்ளது. இதன் இதன் இரண்டு ஓடுபாதைகள் இவ்விரிகுடா வர்ரை செல்லுகின்றன. விமான நிலையத்தில் கிழக்கே உள்ள பொட்டனி துறை 1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது சிட்னியின் மிகப்பெரும் சரக்கு இறங்குதுறை ஆகும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.