பெரி. சிவனடியார்

பெரி. சிவனடியார் (7 செப்டம்பர் 1929 - 19 மார்ச் 2004) தமிழகக் கவிஞர் ஆவார். பொன்னி எனும் இலக்கிய இதழ் இவரை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர் என அறிமுகப்படுத்துகிறது.[1]

பிறப்பும் இளமையும்

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் பெரியண்ணன்-விசாலாட்சிக்கு மகனாக 07-9-1929 இல் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பள்ளிப் பருவம் முதலாகவே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். தம் வாழ்நாளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குப் பெற்றுள்ளார்.

தமிழ்ப் பணிகள்

மதுரை (1981), தஞ்சாவூர் (1995) ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கு பெற்றியுள்ளார். வடமொழி செல்வாக்கிலிருந்தும் இந்தி ஆதிக்கத்திலிருந்தும் தமிழ் மீட்சி இயக்கத்திற்குப் பாட்டு எழுதிய பலருள் இவர் பாட்டும் பலரால் பாராட்டப்பெற்றுள்ளது.[2] வான்மதி, அன்புதென்றல், பொன்னி, மாதவி, தமிழ்ச்செய்தி, கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.

படைப்புகள்

கவிதை நூல்கள்

  • கனிக்குவியல்
  • முருகாஞ்சலி
  • சக்தி சரணங்கள்
  • சக்தியும் மைந்தனும்
  • பரமகுருசுவாமி பதிகம்முதலிய பல.

நாடகம்

  • அவளுக்காக

பட்டங்கள்

  • திருப்பனந்தாள் பாவலர் மன்றம் - சிந்தனைக் கவிஞர்
  • மதுராந்தகம் குருபழநி ஆதீனம் - கவிஞரேறு
  • தமிழக அரசு இவருக்கு 1985 இல் திருக்குறள் நெறித்தோன்றல் எனும் விருதினையும்,1991 இல் பாவேந்தர் விருதினையும் அளித்துள்ளது.

பெற்ற பாராட்டுகள்

கண்ணதாசன் அவர்கள் இவர் கவித்திறனைப் பாராட்டி ஒரு பாடல் இயற்றியுள்ளார். அப்பாடல்,

சிவனடியான் சிவனடியான் என்கின் றாரே'
சிவனுக்கோ இவனடியான் இல்லை இல்லை
இவன்பாடும் பாடல்களைச் சிவனும் கேட்பான்
என்பதனால் இவனுக்கே சிவன் அடியான்

என்பதாகும்.

மறைவு

இவர் 19.3.2004 அன்று மறைந்தார்.

மேற்கோள்கள்

  1. இருபதாம் நூற்றாண்டு பாவேந்தர் பாராதிதாசன் பரம்பரை-செம்மொழி சிறப்பிதழ்-த சண்டே இந்தியன்-2010 பக்கம்-44.
  2. முனைவர் மு.பழனியப்பன்-சிந்தனைக் கவிஞர் பெரி.சிவனடியான்-கலைஞன் பதிப்பகம்-2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.