பூம்பாவை
பூம்பாவை என்பவர் எழாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த பெண்ணாவார். இவர் பாம்பு தீண்டி இறந்து போக, இவரது சாம்பலிலிருந்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பூம்பாவை சந்நிதி அமைந்துள்ள இடம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில். இத்தலத்தில் பூம்பாவை உயிர்ப்பிக்கும் நிகழ்வு பங்குனி பிரம்மோற்சவத்தின் பொழுது நடைபெறுகிறது.
இளமையும் வாழ்வும்
மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். இவர் சிவபக்கதாரக இருந்தார். இவருக்கு பூம்பாவை என்ற மகளொருத்தி இருந்தாள். சைவ சமயத் தொண்டினைச் செய்யும் திருஞானசம்பந்தருக்கு தன்னுடைய மகளான பூம்பாவையை திருமணம் செய்து வைக்க சிவநேசர் எண்ணியிருந்தார்.
தன்னுடைய ஏழாம் வயதில் ஒரு நாள் பூம்பாவை தன்னுடைய தோழிகளுடன் மலர் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பாம்பொன்று தீண்டி இறந்து விட்டாள். [1] திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தமையால், தன்னுடைய மகளை எரித்த பின்னும் அவளுடைய எலும்பு மற்றும் சாம்பலினை நீர் நிலைகளில் கரைக்காது பாதுகாத்து வந்தார் சிவநேசர்.
பூம்பாவை உயிர் பெறுதல்
திருவொற்றியூருக்கு திருஞானசம்பந்தர் வருவதை அறிந்த சிவநேசர், அவரை சந்தித்தார். சிவநேசர் தன்னுடைய மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியதையும், ஆனால் அவள் சிறுவயதில் பாம்பு தீண்டி இறந்து விட்டதையும், தற்போது அவளுடைய சாம்பல் மற்றும் எலும்பினை பாதுகாத்து வைத்திருப்பதைப் பற்றிக் கூறினார்.
திருஞானசம்பந்தர் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை எனும் பாடலைப் பாடிட, பூம்பாவை சாம்பலிலிருந்து உயிர்ப்பெற்று வந்தார். [2] ஏழு வயதில் இறந்த பூம்பாவை, பன்னிரெண்டு வயதான பெண்ணாக உயிர் பெற்றார். இருப்பினும் தானே உயிர் கொடுத்தமையால் பூம்பாவையை திருமணம் செய்து கொள்ள இயலாது என திருஞானசம்பந்தர் மறுத்துவிட்டார்.
அதன் பின் பூம்பாவை இறைத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.
பூம்பாவை சந்நிதி
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவையின் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞானசம்பந்தர், உயிர்ப்பெற்று எழும் பூம்பாவை, பூம்பாவின் பெற்றோர்கள் உள்ளார்கள்.
பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி
திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் தளத்தில் விழாவாக கொண்டாடுகிறார்கள். [3]மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளின் காலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் உற்வச சிலைகளை தீர்த்தல் குளிப்பாட்டிய பிறகு, குடத்தில் நாட்டுச்சர்க்கையை இட்டு பூம்பாவையின் சாம்பலாக கொண்டுவருகிறார்கள்.
அதன்பிறகு திருஞானசம்பந்தரின் பதிக்கம் ஓதப்படுகிறது. இதன் பிறகு பூம்பாவை உயிருடன் எழுந்ததாக பாவனை செய்து நிகழ்வினை முடிக்கின்றார்கள். இந்நிகழ்வினை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். [4]
இவ்வாறு பூம்பாவையை தைப்பூசநாளில் திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தாக கூறப்படுகிறது.[5]
ஆதார நூல்
- மயிலாப்பூர் தலபுராணம்