பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்
சென்னையிலிருந்து பெங்களூரூ செல்லும் நெடுஞ்சாலையில் இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஊர் -- பூந்தமல்லி. இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இதுவே பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் என்பதாகும்
ஸ்தலத்தின் சிறப்பு
இறைவன் பெயர்: ஸ்ரீ வைதீஸ்வரர் (கிழக்கு நோக்கியவர்)
இறைவி: ஸ்ரீ தையல்நாயகி (தெற்கு நோக்கியவர்)
ஸ்தலத்தின் இன்னொரு (சிறப்புப்) பெயர்: உத்தர வைதீஸ்வரர் கோவில்)
ஸ்தல விருக்ஷம்: தாழி பனை மரம்
கோவில் திருக்குளம்: வினை தீர்த்த குளம் (கிழக்கு புறம் உள்ளது)
நவக்ரக ஸ்தலமாகும்
இந்த கோவில் சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று அங்காரக (செவ்வாய்) நவக்ரக ஸ்தலமுமாகும். இது சென்னை நகரில் உள்ள செவ்வாய்க்க்கான நவக்ரக ஸ்தலமுமாகும் (தொண்டை மண்டலம்). கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமுமாகும். இந்த ஸ்தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன.
மூன்று சக்கரங்கள் உள்ளன
இந்த கோவிலின் பிரகாரங்கள் மிகவும் பெரியது. உள் பிரகாரத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ பிரஹ்மா, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ துர்கை ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. இந்த பிராகாரத்தில் ஸ்ரீ ஆதி சங்காரரால் நிறுவப்பெற்ற மூன்று சக்கரங்கள் உள்ளன. அவையாவன: ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சுப்ரமணிய சக்கரம், ஸ்ரீ ஷண்முக சக்கரம். வடக்கு பிரகாரத்தில் வாசல் நோக்கி பானலிங்கம் உள்ளது. கோவிலின் கோபுரம் கிழக்கு புறமாக இருந்தாலும், பிரதானமும் ராஜகோபுரமுமானது வடக்கு பக்கம் உள்ளது. நுழைவாயில் உள்ள இடத்தில் நிறைய சிற்பங்கள் உள்ளன.
சூரிய பூஜை
மாசி மாதம் 21 முதல் 25 முடிய ஐந்து தினங்களில் நடைபெறும் சூரிய பூஜையின் போது, கதிரவனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.