பூதி விக்கிரம கேசரி

பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழன் முதல் சுந்தர சோழன் வரையிலான காலங்களில் கொடும்பாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட இருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் ஆவார். இவர் முதலாம் பராந்தக சோழன் மற்றும் சுந்தர சோழன் காலங்களில் போரில் சோழப் படைகளுக்கு தலைமைவகித்துள்ளார்.

இவருடைய இயற்பெயர் பூதி என்பதாகும். போர் திறமையால் விக்ரம கேசரி என்று வழங்கப்பட்டுள்ளான். தென்னவன் இளங்கோவேள் என்றும் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது.

கொடும்பாளூர் வேளிர் வம்சம்

  • கொடும்பாளூர் வம்சம் தொன்றுத் தொட்ட இருங்கோவேள் வம்சமாக கருதப்படுகிறது[1]. சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே கொடும்பாளூர் நகரம் ‘கொடும்பை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது பழங்காலத்தில் ‘இருக்குவேளூர்’ என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது.[2]
  • இந்த சிற்றரசர்கள் வம்சம் பிற்கால பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலும் கொடும்பாளூர் பகுதியை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்த பொழுது கொடும்பாளூர் வம்சத்தை சேர்ந்த செம்பியன் வளவன் என்பவன் பல்லவனுக்கு உதவியாக போர்ப் புரிந்தான் என்று குறிப்புகள் உள்ளன. (காண்க: கல்கியின் 'சிவகாமி சபதம்'.)
  • மேலும் கொடும்பாளூர் மூவர் கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் 'பரதுர்கமர்த்தனன் என்ற கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர் பெருமை மிக்க வாதாபியை வென்றவன்' என்று காணப்படுகிறது.[3] இந்த சான்றுகள் பிற்கால பல்லவர்களுடனான இவர்களது தொடர்பை தெரியப்படுத்துகிறது.
  • கொடும்பாளூர் இருக்குவேளிர்களுக்கும், பல்லவர்களூக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களுக்கும், பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் சொந்தம் இருந்திருக்கின்றது.
  • எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிள் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்க போட்டிகள் சோழ மண்டலத்தில் அதிகரித்தன. ஆகவே இருக்குவேளிர்கள் மெல்ல பலத்தை அதிகரித்துக் கொண்டுவந்த சோழர்களுடன் நட்புறவு கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டில் (879 - 880 AD) திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போரில் சோழர்கள் பல்லவர்கள் உதவியுடன் பாண்டியர்களை முறியடித்த பிறகு கொடும்பாளூர் அரசர்கள் சோழ அரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.
  • அதன்பிறகு கொடும்பாளூர் வேளிர் வம்சம் திருமண உறவுகள் மூலம் சோழ அரசுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொண்டனர். முதலாம் ஆதித்த சோழனின் மற்றொரு மகனாகிய கன்னர தேவன் கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த பூதிமாதேவ அடிகள் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தான்.[4]
  • பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழனின் இரு மகளிரில் ஒருவரான அனுபமாதேவி என்பவரை திருமணம் செய்திருந்தான்.[5] கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் முதலாம் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி திருமணம் செய்திருந்தான்.[6]
  • சுந்தர சோழன், உத்தம சோழன் மற்றும் முதலாம் இராஜராஜ சோழன் காலங்களில் கொடும்பாளூர் வேளிர் சோழ அரசியலில் மிகப்பெரிய பதவிகளில் இருந்துள்ளனர்.[7] சுந்தர சோழர் காலத்தில் நடைபெற்ற ஈழ படையெடுப்பின் பொழுது 'கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரிக்கு தம்பி முறை உடைய 'பராந்தகன் சிறிய வேளான்' சோழப்படைகளுக்கு தலைமையேற்றுச் சென்று போரில் மரணமடைந்து 'ஈழத்துப் பட்ட பராந்தக சிறிய வேளான்' என்றுப் பட்டம் பெற்றான்.[8] பூதி விக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் நடந்த போரில் சோழப்படைகளுக்கு ஆதித்த கரிகாலனுடன் தலைமையேற்று சென்று போரில் வெற்றி பெற்றார்.[3][7][9][10]

குடும்பம்

பூதி விக்கிரம கேசரி சோழ மன்னனின் மகளான அனுபமையை மணந்தவர். கொடும்பாளூரை ஆண்ட சமராபிராமன் என்பவரின் மகன். கற்றளி மற்றும் வரகுணை என்று இருமனைவிகளும், பராந்தகவர்மன், ஆதித்தய வர்மன் என்று இரண்டு மகன்கள் இவருக்கு இருந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[3]

போர்களில் பங்களிப்புகள்

  • முதலாம் பராந்தக சோழன் கி.பி.910 ல் மதுரையை கைப்பற்றுவதற்கு முன் கொடும்பாளூர் அரசனான விக்கிரமகேசரியுடனான போரில் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் வெற்றி பெற்றான்.[11][12]
  • முதலாம் பராந்தக சோழன் கி.பி.910 ல் மதுரையை கைப்பற்றிய போரிலும், அதன்பிறகு ஈழ மன்னன் ஐந்தாம் காசியப்பன் கி.பி.913-923 களில் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்ட வெள்ளூர் போரிலும் இவர் சோழப்படைகளுக்கு கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர்களுடன் இணைந்து தலைமையேற்று சென்று போரில் வெற்றி பெற்றார்.[11][13]
  • கொடும்பாளூர் மூவர் கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் 'அவன் பல்லவனோடு போரிட்டு அந்தப் படையினர் குருதியால் காவிரி நீரை செந்நீராக்கியவன்' என்று பொருள்படும் 'பல்லவஸ்ய த்வஜின்யா' என்ற சொற்தொடர்கள் அபராஜிதவர்ம பல்லவனுடன் சோழர்களுக்கு ஏற்பட்ட போரையும், அதில் பூதி விக்கிரம கேசரியின் பங்களிப்பையும் தெரிவிக்கிறது.[3]
  • ஆனால் 'வீரோ வீரபாண்ட்யம் வ்யஜயத ஸமரே வஞ்சிவேளந்தகோ அபூத் வ்ருத்தம்' என்ற சொற்தொடர்கள் போரில் 'வீரபாண்டியனை வென்ற வீரன்' என்று பொருட்படுகிறது.[3] இது பூதி விக்கிரம கேசரி' வீரபாண்டியனுடன் நடந்த போரில் வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கிறது. இதனையே சதாசிவ பண்டாரத்தார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[7][9]
  • மேலும் எழுத்தியலின் அடிப்படையில் இக்கல்வெட்டுக்களை கண்டராதித்யனின் காலத்திற்கு முன்பு கொண்டு செல்லவியலவில்லை. ஆகவே பல்லவஸ்ய என்பதற்குப் பதிலாக வல்லபஸ்ய என்றிருந்தால் ராஷ்ட்ரகூட படையெடுப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று பேரா.நீலகண்ட சாஸ்த்ரியார் குறிப்பிடுகிறார்.[3][10]

நூல்கள்

பூதி விக்கிரம கேசரியைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

வரலாறு குறிப்பிடும் பூதி விக்கிரம கேசரியை ஒரு முக்கிய கதாபாத்திரமாக இப்புதினம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. M. Arokiaswamy, The Early History of the Vellar Basin, 1954, p.61
  2. http://pavithra.blogdrive.com/archive/cm-2_cy-2004_m-2_d-10_y-2004_o-0.html
  3. வடமொழி கல்வெட்டுக்கள் - சங்கரநாராயணன்.க
  4. 'பிற்கால சோழர் வரலாறு' - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். பக்கங்கள் : 21,22
  5. 'பிற்கால சோழர் வரலாறு' - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். பக்கங்கள் : 35,36
  6. 'பிற்கால சோழர் வரலாறு' - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். பக்கங்கள் : 46,47
  7. பொன்னியின் செல்வன் - கல்கி
  8. 'பிற்கால சோழர் வரலாறு' - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். பக்கம் : 49
  9. 'பிற்கால சோழர் வரலாறு' - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். பக்கங்கள் : 49,50
  10. (சோழர்கள் 156-157) - பேரா.நீலகண்ட சாஸ்த்ரியார்
  11. 'பிற்கால சோழர் வரலாறு' - தி.வை. சதாசிவ பண்டாரத்தார். பக்கம் : 25
  12. மூன்றாம் இராசசிம்மன் https://ta.wikipedia.org/s/bb9
  13. முதலாம் பராந்தக சோழன் - https://ta.wikipedia.org/s/k66

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.