புளியங்கூடல்
புளியங்கூடல் (Puliyankoodal) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத் தீவில் ஊர்காவற்றுறை தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இக்கிராமம் முற்று முழுதும் இந்துக்களையே பூர்வீகமாகக் கொண்டது.
முன்பு புளிய மரங்களும், நாவல் மரங்களும் நிறைந்து காணப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் அவை இருந்தமைக்கான அடையாளமே தெரியாமல் அருகி விட்டது. புளியமரங்கள் நிறைந்து கூடலாக காணப்பட்டதால் இக்கிராமத்திற்கு புளியங்கூடல் என்ற காரணப்பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. வேலணை, சரவணை, சுருவில், நாரந்தனை மக்களுக்கெல்லாம் பொது வணிக நிலையமாக புளியங்கூடல் சந்தியே விளங்கி வருகிறது. விவசாயத்திற்கு தேவையான நீரை கிராஞ்சி, குளுவந்தனை ஆகிய குளங்களில் இருந்து பெற முடிகிறது.
பாடசாலைகள்
புளியங்கூடல் மாணவர்களுக்கான பாடசாலையாக நடராசா வித்தியாலயம் விளங்கி வருகிறது. நடராசா வாத்தியார் என்பவரினால் தொடர்ந்த இப்பாடசாலை இன்று நூறாண்டுகளை கடந்து தனது கல்விச்சேவையை தொடர்கிறது.
விளையாட்டு
விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவ்வூர் மக்கள் அதற்கென புதுவெளி எனும் மைதானத்தை அமைத்து ஆண்டுதோறும் மாட்டு வண்டில் சவாரி, சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், வினோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம் என இன்னும் பல விளையாட்டுக்களை நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள கோயில்கள்
- புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவில்
- இந்தன் முத்துவிநாயகர் கோவில்
- வேல் கோவில்
- வைரவர் கோவில்
- முனியப்பர் கோவில்,
- வீரபத்திரர் கோவில்,
- ஐயனார் கோவில்
துணை நூல்கள்
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.