பீக்கோர்ன்

பீக்கோர்ன் (bicorne) அல்லது பைக்கோர்ன் (bicorn) என்பது, பழைய காலத்தில் பயன்பட்ட இரண்டு மூலைகளைக் கொண்ட ஒரு வகைத் தொப்பி. 1790களில், ஐரோப்பிய, அமெரிக்கப் தரைப்படையினரும், கடற்படை அதிகாரிகளும் இந்தத் தொப்பியைத் தமது சீருடையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். தற்போது இது நெப்போலியன் பொனப்பார்ட்டுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. எனினும், நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் பிக்கார்னை அணிந்தனர். ஒரு முழுமையான உடைக்கான தலையணியாக இது 1914 ஆம் ஆண்டு வரையாவது பயன்பாட்டில் இருந்தது.

நெப்போலியன் பொனப்பார்ட் தனது தனித்துவமான தொப்பியுடன்

வரலாற்றுப் பயன்பாடு

டிரைக்கோர்ன் (tricorne) எனப்படும் மும்மூலைத் தொப்பியில் இருந்து உருவான பைக்கோன், தொடக்கத்தில் அகன்ற விளிம்பை உடையதாக இருந்தது. இவ் விளிம்பின் முன்பகுதியும் பின்பகுதியும் மேல்நோக்கி மடிக்கப்பட்டிருந்தன. இது தொப்பிக்கு விசிறி போன்ற வடிவத்தைக் கொடுத்தது. பொதுவாக நாட்டு நிறங்களைக் கொண்ட முத்திரை தொப்பியின் முன்பகுதியில் பொருத்தியிருக்கும். பிற்காலத்தில் தொப்பி பொருமளவுக்கு முக்கோண வடிவத்தைக் கொண்டதாக மாறியது. நீட்டிக்கொண்டிருக்கும் இரண்டு மூலைகளும் படிப்படியாக மேலும் கூரிய வடிவத்தைப் பெற்றன. முத்திரை வலப்புறம் இருக்கும்படியாக இத் தொப்பியை அணிந்தனர்.


கிரான்ட் அட்மிரல் அல்பிரட் வொன் திர்பிட்ஸ் பைக்கோர்னை அணிந்திருக்கும் காட்சி.

1970 களில் மூலைகள் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் வகையில் இத் தொப்பியை அணிந்தனர். ஏறத்தாழ 1800 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இத்தொப்பியின் மூலைகள் முன்னும் பின்னுமாக இருக்கும்படியே பெரும்பாலும் அணிந்ததைக் காண முடிகிறது. இந்த மாற்றத்தின் போது நீட்டிக்கொண்டு இருந்த கூரிய முன்புறத்து முனை தட்டையான வடிவத்தையும் பெற்றது.


சில வகை பைக்கோர்ன்கள் தட்டையாக மடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இது தலையில் அணியாதபோது மடித்துக் கைகளுக்குக் கீழ் சொருகிக் கொள்வதற்கு வசதியாக இருந்தது.


உலகின் பெரும்பாலான கடற்படைகளின் அதிகாரிகளுடைய முழுமையான சீருடையின் ஒரு பகுதியாக, முதலாம் உலகப் போரின் இறுதிவரை பைக்கோர்ன்கள் பரவலாகப் பயன்பட்டு வந்தன. பின்னரும் இரண்டாம் உலகப் போர் வரை குறைந்த அளவில் பிரித்தானியா, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சப்பான் ஆகிய நாடுகளினதும், வேறு சில நாடுகளினதும் கடற்படைகளின் அதிகாரிகள் இதனை அணிந்து வந்தனர். ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்குறித்த பயன்பாட்டுக்காக பைக்கோர்னைப் பயன்படுத்துவது முற்றாகவே இல்லாமல் போய்விட்டது.


மேற்குறித்த படைத்துறைப் பயன்பாடுகள் தவிர, 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஐரோப்பாவின் முடியாட்சிநாடுகளிலும், சப்பானிலும், அரச விழாக்களில் சீருடை அணியவேண்டிய தேவை ஏற்படும்போது மூத்த குடிசார் அலுவலர்களும் பைக்கோர்ன்களை அணிந்தனர். பொதுவாக இவ்வழக்கம் முதலாம் உலகப் போருடன் முடிந்துவிட்டது எனினும், மிதவெப்பக் காலநிலை கொண்ட நாடுகளின் பிரித்தானிய ஆளுனர்களும், சில பொதுநலவாய நாடுகளின் ஆளுனர் நாயகங்களும் 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை சடங்குமுறை உடைகளோடு இவற்றை அணிந்து வந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.