பிர்ரிய வெற்றி

பிர்ரிய வெற்றி (பிர்ரிக் வெற்றி, Pyrrhic victory) என்பது பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி இன்னொன்று கிட்டுமெனில் இறுதியில் தோல்வியே ஏற்படும் என்று பொருள்.

போரில் வெற்றி அடைவதற்கு பெரும் இழப்புகளோ பெரும் காலதாமதமோ ஏற்பட்டால் அது பிர்ரிய வெற்றி எனப்படுகிறது. அது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில், அதுவே தோல்வியடையப் (இழப்புகளால்) போதுமானது என்னும் அளவுக்கு வெற்றி பெறும் தரப்புக்கு இழப்புகள் உண்டாகும். கிமு 276ல் உரோமக் குடியரசுடன் ஏற்பட்ட சண்டையின் போது எபிரசின் மன்னன் பிர்ரசு வெற்றி பெற்றார். ஆனால் அச்சண்டையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்து நொந்து போய் “இப்படி இன்னொரு வெற்றி கிடைத்தால், என் கதி அதோகதிதான்” என்று சொன்னதாக ரோம வரலாற்றாளர் புளூட்டார்க் குறிப்பிடுகிறார். ஏனெனில் ரோமர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை ஈடு செய்ய புதிய படையினர் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். இழப்புகளால் அவர்கள் மன உறுதி குலையாமல் மேலும் அவர்களது கோபம் அதிகமானது. ஆனால் பிர்ரசினால் தனது இழப்புகளை உடனடியாக ஈடுசெய்ய இயலவில்லை. சண்டைக்குப் பின் பிர்ரசு சொன்ன கூற்றுக்கு ”இது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில் நான் எபிரசுக்குத் தனியாகத் திரும்பிப் போக வேண்டியது தான்”, “இன்னொரு முறை இப்படி ரோமர்களை வென்றோமெனில் நாம் முற்றிலும் அழிந்து விடுவோம்” போன்ற பிற வடிவங்களும் சொல்லப்படுகின்றன.

காலப்போக்கில் இத்தகு வெற்றிகள் “பிர்ரிய வெற்றி”கள் என்று அழைக்கப்படலாயினர். போரியலில் மட்டுமின்றி வர்த்தகம், அரசியல், விளையாட்டு, சட்டம் போன்ற துறைகளிலும் இப்பயன்பாடு உள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.