பிரிப்பியம்

பிரிப்பியம் (Divisionism) என்பது, புது உணர்வுப்பதிவுவாத ஓவியங்களில் காணப்படும் சிறப்பியல்பான பாணி ஆகும். இதில், நிறங்கள் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு புள்ளிகளாகவோ, பகுதிகளாகவோ வரையப்பட்டு ஒளியியல் அடிப்படையில் பொருட்களின் உண்மை நிறத்தைக் கொடுக்கும்படி செய்யப்படுகின்றது.[1][2]

யோர்ச் சேரா வரைந்த "லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்" என்னும் தலைப்பிட்ட பிரிப்பிய ஓவியம் ஒன்று
வின்சென் வான் கோ வரைந்த தன்னுருவப்படம்

பல்வேறு நிறத் துகள்களைக் கலந்து தேவையான நிறத்தைப் பெறுவதற்கு மாறாக, பார்ப்பவர்களே ஒளியியல் அடிப்படையில் நிறங்களை உணர்ந்துகொள்ளும் தேவையை உருவாக்குவதன்மூலம், அறிவியல் அடிப்படையில் மிகக்கூடிய அளவு சாத்தியமான ஒளிர்வைப் பெற முடியும் என பிரிப்பிய ஓவியர்கள் நம்பினர். யோர்ச் சேரா என்பவர், மைக்கேல் இயுசீன் செவ்ரேல், ஒக்டென் ரூட், சார்ள்சு பிளாங்க் போன்றவர்களில் அறிவியல் கோட்பாடுகளில் இருந்து தான் விளங்கிக்கொண்டவற்றை அடிப்படையாகக்கொண்டு 1884ல் இந்தப் பாணியை உருவாக்கினார். இப்பாணி புள்ளிகள் அல்லது சிறிய கீறுகள் மூலம் உருவாக்கப்படும் Pointillism என்னும் பாணியுடன் சேர்ந்து வளர்ச்சியுற்றது. Pointillism என்னும் பாணியில், நிறங்களைப் பிரிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுவதில்லை.[1][3]

அறிவியற் கோட்பாடுகளும் வளர்ச்சியும்

பார்வை தொடர்பான அறிவியல் கோட்பாடுகள் குறித்து அறிந்த ஓவியர்கள், அக்காலத்தில் மிகவும் வளர்ச்சியுற்றிருந்த உணர்வுப்பதிவுவாதப் பாணியிலிருந்து விலகிச்செல்லத் தொடங்கியபோது 19ம் நூற்றாண்டில் பிரிப்பியப் பாணி உருவானது. பிரிப்பிய ஓவியர்களின் உருவாக்கங்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்த, நிற வேறுபாடுகள் குறித்த அறிவியல் கோட்பாடுகளும் விதிகளும், அவர்களது உருவாக்கங்களை உணர்வுப்பதிவுவாதப் பாணியிலிருந்து வேறுபடுகின்ற புது உணர்வுப்பதிவுவாதப் பாணியில் வைத்தன. பிரிப்பியப் பாணியில் தாக்கத்தை ஏற்படுத்திய, ஒளி, நிறம் என்பவை தொடர்பான கோட்பாடுகளை உருவாக்கிய அறிவியலாளர்கள், ஓவியர்களுள், சார்ள்சு என்றி, சார்ள்சு பிளாங்க், டேவிட் பியரே கியோட்டினோ அம்பேர்ட் டி சுப்பர்வில், டேவிட் சட்டர், மைக்கேல் இயுசீன் செவ்ரேல், ஒக்டென் ரூட், ஏர்மன் வொன் எம்மோல்ட் என்பவர்கள் அடங்குவர்.

மேற்கோள்கள்

  1. Tosini, Aurora Scotti, "Divisionism", Grove Art Online, Oxford Art Online, http://www.oxfordartonline.com/subscriber/article/grove/art/T022975.
  2. Homer, William I. Seurat and the Science of Painting. Cambridge, MA: The MIT Press, 1964.
  3. Ratliff, Floyd. Paul Signac and Color in Neo-Impressionism. New York: Rockefeller UP, 1992. ISBN 0-87470-050-7.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.