பிரம்மாவின் புத்தாண்டு

இந்து சமயத்தில் பிரம்மாவின் புத்தாண்டு என்பது படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கான புத்தாண்டாகும்.

மனிதர்களுக்கான ஆண்டு

  • நிமிஷம் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை.
  • காஷ்டை முப்பது கொண்டது ஒரு கலை.
  • கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம்.
  • முகூர்த்தமென்பது இரண்டு நாழிகை.
  • முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள்.
  • நாள் பதினைந்து கொண்டது ஒரு பக்ஷம்.
  • பக்ஷம் இரண்டு கொண்டது ஒரு மாசம்.
  • மாசம் ஆறு கொண்டது ஒரு அயனம்.
  • அயனம் இரண்டு கொண்டது ஒரு வருஷம்.

தேவர்களுக்கான ஆண்டு

  • இம்மனுஷ வருஷம் ஒன்று தேவர்களுக்கு ஒரு நாள். (தேவர்களுக்கு உத்தராயணம் பகலும், தக்ஷிணாயனம் இராத்திரியுமாயிருக்கும்)
  • மனுஷ வருஷம் முந்நூற்றறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வருஷம்.
  • தேவவருஷம் பன்னீராயிரங் கொண்டது ஒரு சதுர்யுகம்.
  • கிருதயுகம் – 4980 (தேவ வருஷம்) -17 லட்சத்து 28000 (மனுஷ வருஷம்)
  • திரேதாயுகம் – 3960 (தேவ வருஷம்) -12 லட்சத்து 96000 (மனுஷ வருஷம்)
  • துவாபரயுகம் – 2940 (தேவ வருஷம்) -8 லட்சத்து 64000 (மனுஷ வருஷம்)
  • கலியுகம் – 920 (தேவ வருஷம்) -4 லட்சத்து 32000 (மனுஷ வருஷம்)
  • சதுர்யுகம் – 129 (தேவ வருஷம்) -43 லட்சத்து 21000 (மனுஷ வருஷம்)

பிரம்மாவின் ஆண்டு

-இப்படி சதுர்யுகம் ஆயிரம் திரும்பினால், பிரம்மாவுக்கு ஒரு பகலாகும். பின்னும் ஆயிரம் திரும்பினால் ஒரு ராத்திரியாகும். ஆகவே இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும். இந்த நாள் முப்பது கொண்டது ஒரு மாசம். இந்த மாசம் பன்னிரண்டு கொண்டது ஒரு வருஷம். (பிரம்மாவிற்கு இப்போதுதான் புத்தாண்டு வரும்!) இந்த வருஷம் நூறானால் பிரம்மாவின் ஆயுசு முடியும். இவ்வியல்புடைய பிரம்மாக்கள் எண்ணில்லாதவர்கள் பிறந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள். பிரம்மாவினுடைய ஆயுசு பரமெனப்படும். அதில் பாதியாகிய ஐம்பது வருஷம் பார்த்தமென்று சொல்லப்படும்.

மநுவந்தரம்

பிரம்மாவின் பகலாகிய ஆயிரஞ் சதுர்யுகத்திலே பதினான்கு மநுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். அவர்கள் பெயர் சுவாயம்புவர், சுவாரோசிஷர், ஒளத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷீஷவர், வைவஸ்தர், சூரியசாவர்ணி, தக்ஷசாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, ருத்திரசாவர்ணி, ரோச்சியர், பாவியர் என்பவைகளாம். ஒவ்வொரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகும். எழுபத்தொரு சதுர்யுகம், தேவமானத்தினாலே எட்டு லக்ஷத்தைம்பத்தீராயிரம் வருஷங்களாம். மனுஷியமானத்தினாலே முப்பது கோடியே அறுபத்தேழு லக்ஷத்திருபதினாயிரம் வருஷங்களாம். ஒரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகப் பதினான்கு மநுவந்தரத்துக்கும் தொளாயிரத்துத் தொண்ணூற்று நான்கு சதுர்யமுகமாகும். பிரம்மாவின் பகலிலே மிஞ்சிய சதுர்யுகம் ஆறு.

இப்படிப் பதினான்கு மநுவந்தரங்களானால், பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். இதன் முடிவிலே தினப்பிரளயம் உண்டாகும். அப்பொழுது பிரம்மா அப்பகலளவினதாகிய இராத்திரியிலே யோக நித்திரை செய்வர். இப்படி ஆயிரஞ் சதுர்யுகவளவையுடைய இராத்திரி கடந்த பின்பு பிரம்மா, படைத்தற் தொழில் செய்வார். பிரம்மாவுக்கு ஒரு பகல் ஒரு கற்பமெனப்படும். கற்பமாவது சிருட்டி முதற் பிரளயமிறுதியாகிய காலம். ஒரு கற்பத்துக்கு மனுஷ வருஷம் நானூற்று முப்பத்திரண்டு கோடி.

இந்திரர்கள்

பிரம்மாவினுடைய ஒர பகலிலே பதினான்கு இந்திரர்கள் இறப்பார்கள். ஒரு மாசத்திலே நானூற்றிருபது இந்திரர்கள் இறப்பார்கள். ஒரு வருஷத்திலே ஐயாயிரத்து நாற்பது இந்திரர்கள் இறப்பார்கள். பிரம்மாவுடைய ஆயுசுள்ளே ஐந்து லக்ஷத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் இறப்பார்கள்.

சதுர்யுகக் கலியுகம்

தற்காலத்தில் இருக்கின்ற பிரம்மாவிற்கு முதற்பராத்தமாகிய ஐம்பது வயசுஞ் சென்றன. இப்போது நடப்பது இரண்டாம் பரார்த்தத்தில் முதல் வருஷத்து முதல் வருஷத்திலே முதற்தினம். இது சுவேதவராக கற்பம் எனப்படும். பிரளய சலத்தில் முழுகியிருந்த பூமியை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவங்கொண்டு மேலே எடுத்த கற்பமாதலிற் சுவேவதராக கற்பமெனப்பட்டது. இத்தினத்திலே சுவாயம்புவமநு, சுவாரோசிஷ்மநு, ஒளத்தமமநு, தாமசமநு, ரைவதமநு, சாக்ஷீஷமநு என்னும் மநுக்கள் இறந்து போனார்கள். இப்போது ஏழாவது மநுவாகிய வைவஸ்வத மநுவினுடைய காலம் நடக்கிறது. இவருடைய காலத்திலே இருபத்தேழு சதுர்யுகங்கள் சென்றன. இப்பொழுது இருபத்தெட்டாவது சதுர்யுகத்துக் கலியுகம் நடக்கிறது.

ஆதாரம்

  • யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் செய்த பாலபாடம் நான்காம் புத்தகம் குறிப்புரையும் அப்பியாச வினாக்களும் பக்கம் 185-187, வெளியீடு ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, சிதம்பரம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.